நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் வீட்டிற்கு வந்து சென்ற பணிப்பெண் நகைத் திருட்டில் ஈடுபட்டதை சிசிடிவி கேமராவைப் பொருத்தி கண்டுபிடித்த உரிமையாளர், கையும் களவுமாக அவரை போலீசில் ஒப்படைத்தார்.
லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரது வீட்டில் 4 மாத பெண் குழந்தை உள்ளது. அந்தக் குழந்தையை குளிப்பாட்டிப் பராமரிக்க லட்சுமி என்ற பெண்ணை நியமித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே வீட்டின் பீரோவில் இருந்த நகைகள் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகத் தொடங்கியுள்ளன. இதனையடுத்து யாருக்கும் தெரியாமல் பீரோவின் முன்பகுதியில் சிசிடிவி கேமரா ஒன்றைப் பொருத்தினார் குணசேகரன்.
அதில் வீட்டுக்கு வந்து சென்ற பணிப்பெண் லட்சுமி கையும் களவுமாக சிக்கினார். குணசேகரனும் அவரது மகனும் வேலைக்குச் சென்றபின் மருமகள் மட்டும் தனியாக இருப்பதைப் பயன்படுத்தி, அவர் கவனத்தை திசை திருப்பி நகைகளைத் திருடி வந்தது தெரியவந்தது.
சிசிடிவி கேமரா பதிவுகளோடு புகாரளித்ததை அடுத்து, லட்சுமியை போலீசார் கைது செய்தனர்.