திருவனந்தபுரம்:
சென்னையை சேர்ந்தவர் சுப்பராவ் பத்மம். இவர் சென்னையில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது சகோதரி வீட்டில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி கேரளாவில் உள்ள கோவில்களுக்கு புனித யாத்திரை செல்வார்.
அவ்வாறு செல்லும்போது ஆலுவாவில் உள்ள சாலையோர கடையில் கேரள லாட்டரி சீட்டு வாங்குவது வழக்கம். அந்த கடையை சுமிஜா என்ற பெண் நடத்தி வருகிறார்.
சுப்பராவ் பத்மம் வாங்கும் லாட்டரி சீட்டுகள், விற்பனையாளர் சுமிஜாவிடம் இருக்கும். அதற்கு பரிசு விழுந்தால், அதுபற்றி அவர் சென்னையில் இருக்கும் சுப்பராவ் பத்மத்திற்கு தகவல் கொடுப்பார்.
அதன்படி சுப்பராவ் பத்மம் சமீபத்தில் கேரளா சென்றபோது வாங்கிய லாட்டரி சீட்டுக்கு 2-வது பரிசான ரூ.25 லட்சம் விழுந்தது. இந்த தகவலை சுமிஜா, சென்னையில் வசிக்கும் சுப்பராவ் பத்மத்துக்கு தெரிவித்தார். அவர் இரண்டு நாட்களில் ஆலுவா சென்று பரிசு சீட்டை பெற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.
ஆலுவாவில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வரும் சுமிஜா, கடந்த ஆண்டு கோடை காலத்தில் விற்பனை செய்த லாட்டரி சீட்டுக்கு பம்பர் பரிசான ரூ.6 கோடி விழுந்தது. அந்த சீட்டை வாங்கிய நபர், அதனை சுமிஜாவிடம் கொடுத்து வைத்திருந்தார்.
பரிசு விழுந்ததும், சுமிஜா, அந்த தகவலை சீட்டு வாங்கியவருக்கு தெரிவித்து, சீட்டையும் ஒப்படைத்தார். அப்போது அவரது நேர்மையை பலரும் பாராட்டினர். இப்போதும் அவர் சென்னையை சேர்ந்தவருக்கு ரூ.25 லட்சம் பரிசு விழுந்த தகவலை தெரிவித்து மீண்டும் தனது நேர்மையை நிரூபித்துள்ளதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.