புதுடெல்லி :
கொரோனா வைரசுக்கு எதிரான அரசின் தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி உள்ளது.
இந்த தடுப்பூசியின் முதல் டோஸ்-ஐ செலுத்திய பின்னர் 12 முதல் 16 வாரங்களில் 2-வது டோஸ் தற்போது செலுத்தப்படுகிறது. இந்த கால இடைவெளி,தேசிய கொரோனா தடுப்பூசி உத்தியின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மற்றொரு தடுப்பூசியான கோவேக்சின் தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் டோஸ் செலுத்தி, 28 நாளில் 2-வது டோஸ் செலுத்தப்பட வேண்டும்.
இந்த நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசி 2-வது டோஸ் பெறுவதற்கான கால இடைவெளியை குறைப்பது என தடுப்பூசிக்கான உயர் அமைப்பான நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு (என்.டி.ஏ.ஜி.ஐ.) பரிந்துரை செய்துள்ளது.
அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ்-ஐ 12 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்பதை 8 முதல் 16 வாரங்களில் செலுத்தலாம் என்று மாற்றி அமைக்கலாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு பல நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீதமுள்ள 6 முதல் 7 கோடி வரையிலான நபர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்த வழி பிறக்கும்.
இது எப்போது அமலுக்கு வரும் என தெரிவிக்கப்படவில்லை.
இதையும் படிக்கலாம்….தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்