கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை இதுவரை 12-16 வார இடைவெளியில் மக்கள் செலுத்தி வந்தனர். இந்த இடைவெளியை 8 முதல் 16 வாரங்களுக்குள் செலுத்திக் கொள்ளலாம் என நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) அரசுக்குப் பரிந்துரைத்தது.
இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் இனிமேல் 8 முதல் 16 வாரங்களிலேயே இரண்டாவது டோஸ் செலுத்தப்படும். இந்தப் பரிந்துரை சமீபத்திய உலகளாவிய அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு சொல்லப்பட்டது.
கோவிஷீல்டின் இரண்டாவது டோஸ் எட்டு வாரங்களுக்குப் பிறகு கொடுக்கப்பட்டாலும், 12 முதல் 16 வார இடைவெளியில் கொடுக்கப்படும்போது உருவாகும் எதிர்ப்பாற்றலைப் போல கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ், 28 நாள்களுக்குப் பிறகு கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசிக்கான கால இடைவெளி குறித்து எந்தக் கருத்தையும், ஆலோசனைக் குழு இன்னும் பரிந்துரைக்கவில்லை.
ஒன்றிய அரசு மே 13, 2021 அன்று, கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கான இடைவெளியை ஆறு முதல் எட்டு வாரங்களில் இருந்து 12-16 வாரங்களுக்கு என்.டி.ஜி.ஐ.யின் பரிந்துரைகளின் அடிப்படையில் நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.