சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம்: ஒன்றிய அரசு

டெல்லி : சர்க்கரை உற்பத்தியிலிருந்து, எத்தனால் உற்பத்திக்கு சர்க்கரை ஆலைகள் மாற வேண்டியது அவசியம் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.மும்பையில் நடந்த சர்க்கரை மற்றும் எத்தனால் இந்தியா மாநாட்டில், உள்நாடு மற்றும் உலகளாவிய சர்க்கரை  தொழிலில் உள்ள சவால்கள், இந்தியாவில் சர்க்கரை மற்றும் எத்தனால் துறையை புதுமையாகவும், நிலைத்தன்மை உடையதாகவும் மாற்றுவதற்கான உத்திகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது:’நாட்டின் தேவைக்கு ஏற்ப சர்க்கரை ஆலைகள், சர்க்கரை உற்பத்தியிலிருந்து எத்தனால் உற்பத்திக்கு மாற வேண்டும்.  தற்போது உள்ளது போல் சர்க்கரை உற்பத்தியை தொடர்ந்தால், வரும் காலங்களில் அது சர்க்கரை ஆலைகளுக்கு நல்லதல்ல.  நமது நாட்டில் அரிசி, சர்க்கரை மற்றும் சோளம் ஆகியவற்றின் உற்பத்தி அதிகமாக உள்ளது. எதிர்காலத்தில் சர்க்கரை உற்பத்தியை குறைத்து, எத்தனால் உற்பத்தியை அதிகரிப்பதுதான் நல்லது.எத்தனால் பொருளாதாரம் மிகச் சிறந்தது. பலவகை எரிபொருட்களில் இயங்கும் , பிஃளக்ஸ் என்ஜின்களை தயாரிக்கும்படி வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 6 மாதத்துக்குள் இந்த வகை என்ஜின்களை தயாரிப்பதாக டொயாட்டோ, ஹூண்டாய், சுசுகி ஆகிய நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. எத்தனால் உற்பத்தி செய்யும் சர்க்கரை ஆலைகள் தங்கள் தொழிற்சாலை அமைந்திருக்கும் பகுதிகள் அல்லது இதர பகுதிகளில் எத்தனால் நிலையங்களை திறக்க வேண்டும். அப்போதுதான் 100 சதவீத எத்தனாலில் இயங்கும் ஸ்கூட்டர்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் மற்றும் கார்களை அறிமுகம் செய்து, எத்தனால் நுகர்வை அதிகரித்து மாசுவை குறைக்க முடியும். இதன் மூலம் கிராமங்களில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்க முடியும், பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியை குறைக்க முடியும்.எத்தனாலுக்கு நிச்சயம் மிகப் பெரிய சந்தை உருவாகும். எத்தனாலுக்கு மிகப் பெரிய சந்தை உருவாகுமா என யாரும் கவலைப்பட வேண்டாம். எத்தனால், மெத்தனால், பயோ எத்தனால், உயிரி-இயற்கை எரிவாயு, பயோ டீசல், பயோ-எல்என்ஜி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் மின்சாரத்தில் தான் எதிர்காலம் உள்ளது.’இவ்வாறு ஒன்றிய  அமைச்சர் நிதின்கட்கரி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.