சென்னை: ஜெயலலிதா சிகிச்சை குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியுள்ள ஓபிஎஸ், அப்போலோவில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்லவில்லை என்று ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து நாளையும் ஓபிஎஸ்சிடம் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச்சென்று சிகிச்சை அளிக்க முற்பட்டது, அமெரிக்க மருத்துவர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்துவிட்டு, சிகிச்சை அளிக்காமல் ரிட்டன் ஆனது குறித்தும், ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஓபிஎஸ், இளவரசியிடம் விசாரணை நடைபெற்றது. ஜெயலலிதா மரணம் அடைந்தபோது இடைக்கால முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ். அதனால் அவரிடம் இன்று ஆணையம் விரிவான விசாரணை மேற்கொண்டது. காலை 2மணி நேரம் நடைபெற்ற விசாரணையைத் தொடர்ந்து, மதிய இடைவேளைக்கு பிறகும் விசாரணை தொடர்ந்து.
இன்றைய விசாரணையின்போது, ஜெயலலிதாவுக்கு அப்போலோவில் எந்தெந்த மருத்துவர்கள், என்ன நோய்களுக்கு சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது ஜெயலலிதா மருத்துவமனையில் எதற்காக அனுமதிக்கப்பட்டார் என்ற விவரமும் எனக்கு தெரியாது என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
பின்னர் பிற்பகலில் நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயலலதா சிகிச்சை பெற்ற மருத்துவமனை பகுதியில் உள்ள சிசிடிவி காமிராக்களை நான் அகற்ற சொல்ல வில்லை என்று கூறிய ஓபிஎஸ்,. தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சராக பொறுப்பு ஏற்றது வரை நான் அளித்த பேட்டிகள் அனைத்தும் சரியானதே என்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓபிஎஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அண்ணா, எம்.ஜி.ஆர். போல ஜெயலலிதாவையும் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்லலாம் என அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் கூறியதாகவும், ஆனால் அப்போலோ மருத்துவர்களுடன் கலந்து பேசிய பின்னர் சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து முடிவு செய்யப்படும் என்று விஜயபாஸ்கர் கூறினார்.
அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் மருமகன் விஜயகுமார் ரெட்டியிடம், இதே கருத்தை வலியுறுத்தினேன். ஆனால், ஜெயலலிதாவின் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்திருப்பதால் ஒரு வாரத்தில் ஜெயலலிதா திரும்பி விடுவார் என்று விஜயகுமார் கூறினார். அமைச்சர்கள் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் எதுவும் கூறவில்லை.
ஜெயலலிதாவை வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து என்னிடம் கேட்டிருந்தால், உடனே கையெழுத்து போட்டிருப்பேன். அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் ஆகியோர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக எய்ம்ஸ் மருத்துவர்களை வரவழைத்தனர்” என்று கூறினார்.
நோயின் தன்மையை பொறுத்து வெளிநாடுகளுக்கு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களிடம் சிசிக்சை அளிக்க அரசியல் பிரபலங்களை உயர்சிகிச்சைக்காக அழைத்து செல்வது தவறு இல்லை என்றும், சசிகலாவின் அழைப்பிதழ் பெயரில் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோ கிராபி சிகிச்சை அளிக்க கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது என்று ஓ.பி.எஸ். வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் இன்று காலை மாலை என இருமுறை விசாரணைக்கு ஆஜரான நிலையில், நாளையும் விசாரணைக்கு ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது