சுவிஸ் மக்களுக்கு நேரலையில் உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, அவர்களுக்கு சில முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார்.
சனிக்கிழமையன்று Bern நகரில் கூடிய ஆயிரக்கணக்கான சுவிஸ் குடிமக்கள் முன் நேரலையில் உரையாற்றிய ஜெலன்ஸ்கியை, சுவிஸ் ஜனாதிபதியான Ignazio Cassis மக்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
தான் பலமுறை சுவிட்சர்லாந்துக்கு வந்துள்ளதாக தனது உரையில் தெரிவித்த ஜெலன்ஸ்கி, தனது நாட்டு மக்களும் சுவிஸ் மக்களைப்போல வாழவேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறினார்.
அப்படி உக்ரைன் மக்களை சுவிஸ் மக்களைப்போல வாழவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோதுதான், திடீரென பிப்ரவரி மாதம் 24ஆம் திகதி, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியது என்றார் அவர்.
அதற்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது என்று கூறிய ஜெலன்ஸ்கி, அந்தப் போர் தங்களை மட்டுமல்ல, ஐரோப்பாவையே, ஏன் சுவிட்சர்லாந்தைக் கூட மாற்றிவிட்டது என்றார்.
வேறுமனே தூரத்தில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காமல், தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக சுவிஸ் மக்களுக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார் அவர்.
அழகான ஜேர்மன் மொழியில் பேசிய ஜெலன்ஸ்கி, சுவிஸ் மக்களுக்கு சில கோரிக்கைகளும் வைத்துள்ளார்.
தங்கள் மீது போர் தொடுத்து, குழந்தைகள், நோயாளிகள், கர்ப்பிணிகள் என்று கூட பார்க்காமல், பள்ளிகள், மருத்துவமனைகள் மீதெல்லாம் குண்டு வீசி, பொதுமக்களைக் கொன்று குவிக்கும் ரஷ்யர்கள், சுவிஸ் வங்கிகளில் ஏராளம் பணத்தைக் குவித்து வைத்திருப்பதாக தெரிவித்துள்ள அவர், அந்த பணத்தை முடக்கவேண்டும் என சுவிஸ் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
’நல்ல உணவு, நல்ல வாழ்வு’ என்னும் வாசகத்தை தனது அடையாளமாகக் கொண்டுள்ள சுவிஸ் நிறுவனமான நெஸ்ட்லே நிறுவனம் ரஷ்யாவை விட்டு வெளியேற மறுப்பதைக் குறித்து தனது உரையில் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, சுவிஸ் மக்களும் உக்ரைன் மக்களைப் போல உணரவேண்டும், சுவிட்சர்லாந்து எங்களுடன் இருந்தால் நிச்சயம் எங்களுக்கு வெற்றி, உக்ரைன் உங்களுடன் இருந்தால், அது உங்களுக்கு பலம் என்றார்.