புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடாவுக்கு சந்தன மரத்தால் ஆன கிருஷ்ண கடவுள் கலைநயப் பொருளை பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கி சிறப்பித்தார்.
இந்தியா-ஜப்பான் இடையேயான 14-வது வருடாந்திர உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா 2 நாள் பயணமாக இந்தியா வந்தார்.
இதைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் கிஷிடாவும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பிரதமர் நரேந்திர மோடிமற்றும் ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா ஆகியோர் முன்னிலையில் இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக, இணையப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தகவல் பகிர்வு மற்றும் ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத் தாகியுள்ளன.
இதனிடையே பியுமியோ கிஷிடாவுக்கு கிருஷ்ண பங்கி என்று அழைக்கப்படும் கிருஷ்ண கடவுள் கலைப்பொருளை பிரதமர்மோடி பரிசாக வழங்கி சிறப்பித்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்படும் இந்த நுண்ணிய வேலைப்பாடுள்ள கலைப்பொருள் மிகவும் பழமை வாய்ந்தது. சந்தனமரத்தாலான இதில் கிருஷ்ணரின் சிலைகள், கையால் செதுக்கப்பட்ட இந்தியாவின் தேசியப் பறவையானமயில் ஆகியவை இடம்பெற் றுள்ளன.
இந்த கிருஷ்ண பங்கி பாரம்பரிய கருவிகளால் நுணுக்கமாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் மயில் உருவமும், கிருஷ்ணரின் வெவ்வேறு தோற்றங்களும் கலைநயத்துடன் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த கலைநயப் பொருளில் சிறிய அளவில் மணிகள் செதுக்கப்பட்டு இடம்பெற்றுள்ளன. காற்று வீசும்போது அந்த மணிகள் ஒலித்து கலைப்பொருளுக்கு மேலும் அழகூட்டு கிறது. ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் அமைந்துள்ள சிலை விற்பன்னர்கள் இதைச் செய்துள்ளனர்.
– பிடிஐ