முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டிசம்பர் 5, 2016-ல் மரணமடைந்தார். அவருடைய மரணத்தில், மர்மம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் சந்தேகங்களை எழுப்பினர். இதையடுத்து, 2017ம் ஆண்டு, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது.
நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணையை முழுமையாக முடிப்பதற்கு கால அவகாசம் கேட்டதையடுத்து ஆணையத்துக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக இருந்தபோது விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அவர் துணை முதல்வராக இருந்ததால், பணிகள் காரணமாக ஆஜராவதில் இருந்து அவகாசம் கேட்டு ஆஜராகாமல் இருந்து வந்தார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது. இந்த விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், 2019-ல் இந்த வழக்கில் உரிய மருத்துவக் குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது. தற்போது ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ, மருத்துவக் குழுவை அமைக்குமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, எய்ம்ஸ் மருத்துவர் நிகில் டாண்டன் தலைமையில் 6 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து மருத்துவர்கள், சசிகலா மற்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு வழக்கறிஞர்களுடன் ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை நடத்தியது. அதைத் தொடர்ந்து, அப்போலோ மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது
இந்த நிலையில், கடந்த மார்ச் 7ம் தேதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மீண்டும் விசாரணையைத் தொடங்கியது. அப்போலோ மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர் என 6 பேரிடம் விசாரணை ஆணையம் விசாரணை நடத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசி ஆகியோர் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆறுமுசாமி விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார். அவருக்கு முன்னதாக, இளவரசியும் விசாரணை ஆணையம் முன்பு ஆஜரானார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”