ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சராக இருந்த பொழுது சசிகலா தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சொன்னதாக கூறி ஒ.பன்னீர்செல்வம் தர்ம யுத்தத்தை நடத்தினார்.
பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின் ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையின் பேரில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தியுள்ள நிலையில், 90 விழுக்காடு விசாரணை நிறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தற்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.
இதுவரை நடைபெற்ற விசாரணையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது தான் சொந்த ஊரான தேனியில் இருந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, தான் சென்னை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் ஜெயலலிதாவை மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில் சந்தித்ததுதான் கடைசி என்றும் அதன் பிறகு, தான் சொந்த ஊர் சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு சென்னை வந்ததும் தலைமைச் செயலாளரிடம் இவர்களை கேட்டதாகவும் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கர் இடமும் சிகிச்சை விவரங்களை கேட்டதாகவும் வரும் சமயத்தில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவிற்கு நீரிழிவு நோய் இருந்தது மட்டுமே தமக்குத் தெரியும் என்றும், வேறு எந்த வித உடல் உபாதைகள் பற்றியும் நமக்குத் தெரியாது என்றும் பன்னீர்செல்வம் ஆணையத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனை வளாகத்திலேயே அவர் காவிரி பிரச்சினை தொடர்பாக கூட்டம் நடத்தியது தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது என்றும் காவிரி பிரச்சனை தொடர்பாக அறிக்கை வந்த பிறகு தமக்கு அது பற்றி தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் என்ற அடிப்படையில் விசாரனை ஆணையம் அமைக்கும் கோப்பில் தாம் கையெழுத்திட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் 3 மணியில் இருந்து மீண்டும் ஓ. பன்னீர் செல்வத்துடன் தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளது.