பேஷன் நகரம் (Milan), தங்க நகரம் (Vincenza), மிதக்கும் நகரம் (Venice) இப்படி பல நகரங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. ஏன், இத்தாலியில் உள்ள பேய் கிராமம் பற்றி கூட நாம் பதிவிட்டுள்ளோம்.
சதுரங்க நகரம் (City of Chess) கேள்விப்பட்டதுண்டா?
ஆம், இந்நகரம் இத்தாலியில் வெனிஸ் நகரத்தின் மிக அருகாமையில் தான் இருக்கிறது.
இந்நகருக்கு ஏன் இந்த பெயர் வந்தது? இந்நகரத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்பதை பற்றி தான் நாம் இன்று இந்த பதிவில் காணவுள்ளோம்.
இத்தாலிக்கு சுற்றுலா வரும் பெரும்பாலான மக்கள் வெனீஸ் (Venice), ரோம் (Rome), பைசா நகரம் (Pisa), பிளாரென்ஸ் (Florence) என்று சுற்றுலாவிற்கு பிரசித்தி பெற்ற இடங்களை பார்க்கவே ஆவலாக இருப்பார்கள்.
இருப்பினும், இத்தாலி முழுவதுமே அதிசிய, பல அருமையான இடங்கள் உண்டு. அதில் ஒன்று தான் சதுரங்க நகரம் என்றழைக்கப்படும் மரோஸ்டிக்கா (Marostica).
இந்த நகரம் வெனீஸ் நகரத்திலிருந்து ஒரு 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. காரில் சென்றால், வெனிஸ் நகரத்திலிருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் இதை சென்றடையலாம். இந்த நகரம் சிவப்பு செரி பழங்களுக்கு மிகவும் பிரபலம். அதே போன்று இங்கு தயாரிக்கப்படும் ஒயின் மற்றும் ஆலிவ் எண்ணெய்க்கும் மிக பெரிய வர்த்தகம் உண்டு.
இங்கு நடக்கும் சதுரங்க விளையாட்டு உலக புகழ் பெற்றது. இது சாதாரண சதுரங்க விளையாட்டு தானே என்று எண்ண வேண்டாம். பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒரு இளவரசியை கைப்பிடிக்க நடந்த இந்த சதுரங்க சுயம்வரம் மிகவும் வித்தியாசமானது. இந்த வித்தியாசமான விளையாட்டே இந்நகரத்திற்கு சதுரங்க நகரம் என்ற பெருமையையும் பெற்று தந்துள்ளது.
15ம் நூற்றாண்டில் இந்த நகரத்தை ஆண்ட மன்னனின் அழகிய இளவரசியின் பெயர் லியோநோரா. இவரின் கரம் பிடிக்க இரண்டு இளவரசர்கள் போட்டியிட்டனர். இருவருக்குமே அந்த இளவரசியின் மீது தீராத காதல். அன்றைய காலங்களில் இது போன்ற சமயங்களில் அந்த இருவரையும் நேருக்கு நேர் சண்டையிட கூறி, அதில் ஒருவர் வீழ்வதும், அவரை வீழ்த்தியவர் வெற்றி பெற்று அந்த இளவரசியின் கரம் பிடிப்பதும் வழக்கம்.
ஆனால், அரசருக்கோ அந்த இருவருமே தன் குடும்ப சொந்தங்கள் என்பதால் அவர்களில் யாரையும் இழக்க துணிவில்லை. எனவே கத்தியின்றி ரத்தமின்றி இதற்கு ஒரு சுமூக முடிவு எடுக்க வேண்டி ஒரு வித்தியாசமான ஆலோசனை வழங்கினார்.
அந்த ஆலோசனை என்னவென்றால், அவ்விருவரும் தங்களது புஜபலன்களை உபயோகித்து மற்றவரை கொன்று வீழ்த்துவதை விட, தங்களின் மதிநுட்பத்தை கொண்டு இந்த சுயம்வரத்தில் இளவரசியை வெல்ல வேண்டும் என்பதே.
அதற்காகவே இந்த விசித்திரமான சதுரங்கம் விளையாட்டை அறிவித்தார். அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவருக்கே தனது பெண் என்றும், தோற்றவனுக்கும் அவரது இளைய மகளை மணமுடிக்க அழைப்பு என்றும் அறிவித்தார்.
சதுரங்கம் என்றால் நாம் இன்று பலகையின் மீது சிறிய காய்களை நகற்றி விளையாடுகின்றோமே அப்படி அல்ல.
இந்த சதுரங்க போட்டி ஒரு விழா காலங்களில் அந்த நகரத்தின் முக்கிய இடத்திலுள்ள அன்றைய கோட்டையின் முன் ஆட வேண்டும் என்றும், மனிதர்களே சதுரங்க காய் போன்று நின்று ஆட வேண்டும் என்றும் கட்டளையிட்டார். இவை அனைத்தையும் தன் மக்கள் கண்டுகளிக்கும் வகையில் நடத்தவே விரும்பினார். அவர்களை உற்சாகமூட்ட இறுதியில் கோலாகலமாக பட்டாசு வெடித்து கொண்டாட வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
கோட்டை வாசலின் முன் போட்டிக்கான சதுரங்கம் வரையப்பட்டன. சதுரங்கத்தின் மீது ராஜா, ராணி, மந்திரி, சிப்பாய்கள் என வேடமணிந்து மனிதர்களே நகர்ந்து விளையாடினார்கள். அப்படியென்றால் குதிரைக்கும் யானைக்கும் என்ன செய்தார்கள் என்று தானே கேட்குறீர்கள். பக்கத்திற்கு இரண்டு பேர் என நால்வர் குதிரை மேல் அமர்ந்த படியே விளையாடினார்கள். நல்ல வேலை, இங்கே யானையின் பங்கிற்கு நிஜ யானையை நிறுத்தாமல் விட்டார்கள்.
இப்படி உருவானது தான் இந்த சதுரங்க சுயம்வரம். இந்த நிகழ்வை நினைவு கூறும் பொருட்டு இந்த சுயம்வரம் இன்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நகரத்தில் கோட்டையின் முன் நடை பெறுகிறது. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி தொலை தூரங்களில் இருந்தும் பொதுமக்களும் வந்து ஆவலுடன் கண்டுகளிக்கின்றனர்.
நரை ததும்பிய கேசத்தைவிட, கார் கூந்தலையே அனைவரும் விரும்புவர். வெண்மேகத்தை விட, கார்மேகம் தான் நமக்கு மழை போன்ற பல நன்மைகளை அளிக்கும். அப்படி போற்ற கூடிய கருப்பு காய்கள் இருக்கும் பொழுது சதுரங்கத்தில் எதற்காக வெள்ளைக்கு முன்னுரிமை என்று என்றைக்காவது சிந்தித்தது உண்டா?
சரி சரி, அந்த கருப்பு வெள்ளைக்கான பஞ்சாயத்துக்குள் செல்ல வேண்டாம். சென்ற ஆண்டு நடக்கவிருந்த இந்த சதுரங்க சுயம்வரம் கொரோனா தொற்று காரணத்தினால் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. உடனே இத்தாலிக்கு ஒரு டிக்கெட்டை போட்டு வந்து பார்க்குற ஜோலிய பாருங்க.
துப்பாக்கியையும், பீரங்கியையும் விடுத்து இந்த மாதிரி இன்னைக்கிருக்கும் ஒவ்வொரு நாட்டின் தலைவரும் சிந்தித்தால் உலக யுத்தம் என்பது வரவே வராது.
என்ன நான் சொல்லுறது, சரிதானே?
இத்தாலியிலிருந்து,
மகேஸ்வரன் ஜோதி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.