உத்தரபிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்திருந்தாலும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தேர்ந்தெடுப்பதில் சில சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி பாஜக-வில் கடுமையான உட்கட்சி குழப்பம் நிலவுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
உத்தரபிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவு, கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியாகி இருந்தது. அதில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களுக்கு மேலாகியும் பஞ்சாப் மாநிலத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் பதவியேற்பு விழா நடைபெறவில்லை. இன்று மாலை 5 மணிக்கு தான் மணிப்பூர் மாநிலத்தின் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. நீண்ட ஆலோசனைக்கு பிறகு முதல்வரான பைரின் சிங், மீண்டும் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிற மாநிலங்களை பொறுத்தவரை, உத்தரகாண்ட் மாநிலத்திலும் எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட போதும் முதல்வர் மற்றும் அமைச்சர்கள் யாரும் இன்னும் தேர்ந்தெடுக்கப்படவில்லை கோவா மாநிலத்திலும் இதே நிலைமைதான் உத்தரபிரதேச மாநிலத்தை பொறுத்தவரை முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் என்றாலும், இன்னும் அமைச்சரவை முடிவு செய்யப்படவில்லை. இதற்காக வரும் 23ஆம் தேதி லக்னோ செல்லும் மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா, மார்ச் 24-ம் தேதி சட்டமன்ற குழு உறுப்பினர்களை சந்திக்கிறார். இதனையடுத்து மார்ச் 25-ம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் என தகவல்கள் சொல்லப்படுகிறது.
பாஜகவின் இந்த தாமதத்தை சுட்டிக்காட்டி அக்கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார் டெல்லி முதல்வரும் – ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால். இதுகுறித்து பேசியுள்ள அவர், “பஞ்சாப் மாநிலத்தில் நேர விரயம் எதையும் செய்யாமல், சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு நடந்ததோடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்கும் நடைபெற்றுவிட்டது. அதனால் தற்போது அங்கு அரசாங்கம் வேலை செய்ய தொடங்கிவிட்டது. ஆனாலும் பாரதிய ஜனதா கட்சி 4 மாநிலங்களில் வெற்றி பெற்றபோதும், தற்பொழுது வரை அவர்களால் அரசாங்கத்தை அமைக்க முடியவில்லை. இதற்கு கட்சிக்குள் நிலவும் கடுமையான உள்கட்சி பூசல் தான் காரணம்.
வெறும் மூன்றே நாட்களில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மாண் அரசாங்கப் பணிகளை தொடங்கி விட்டார். அவரது செயல்பாடுகள் குறித்து, இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் பேசி வருகின்றனர். அதைப் பார்க்கையில், அவரை நினைத்து நான் பெருமை படுகிறேன். நாங்கள் இப்படி செயல்பட்டுக் கொண்டிருக்க, பாஜகவினர் 4 மாநிலங்களில் தங்களது உள்கட்சி பூசலை சமாளிக்கவே நேரத்தை செலவிட்டு வருகின்றனர்” என்று விமர்சித்துள்ளார்.
நான்கு மாநிலங்களில் வெற்றி பெற்றும் இன்னும் முதல்வர் பதவியேற்பு – அமைச்சரவை தேர்வு உள்ளிட்டவை மேற்கொள்ளப்படாமல் இருப்பதால் ஆம் ஆத்மி மட்டுமன்றி பாஜக-வை பிற கட்சிகளும்கூட விமர்சனம் செய்கின்றன. இது பாஜகவிற்கு சற்று நெருடலை ஏற்படுத்தியுள்ளது.
– நிரஞ்சன் குமார்
சமீபத்திய செய்தி: இதுதான் தோல்வியை விரட்டி வெற்றியைப் பிடிக்கும் வழி! – பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM