ஜெ.மரணம் – எனக்கு எதுவும் தெரியாது : ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு வாக்குமூலம்

ஜெயலலிதா எதற்காக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது தமக்கு தெரியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு 8 முறை ஆறுமுகசாமி ஆணையம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியிருந்த நிலையில், முதன்முறையாக ஆஜராகி விளக்கமளித்தார்.

ஜெயலலிதாவுக்கு என்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டது? எந்தந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என எந்த தகவலும் தமக்கு தெரியாது எனக் கூறிய ஓ.பி.எஸ்., ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலையே சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவு நேரத்தில் உதவியாளர் மூலம் தெரிந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முதல் நாள் மெட்ரோ திறப்பு விழாவில் தான் அவரை கடைசியாக பார்த்தாகவும், அதற்கு பிறகு பார்க்கவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு நீரிழிவு நோயை தவிர்த்து வேறு என்ன உடல் உபாதைகள் இருந்தன என்பதும் தமக்கு தெரியாது என தெரிவித்த ஓ.பி.எஸ்., ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை முறைகளை அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மூலமாகவே தெரிந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது, அங்கு காவேரி கூட்டம் நடந்ததாக சொல்லப்படுவது குறித்தும் தமக்கு எதுவும் தெரியாது எனவும், அந்த கூட்டத்தை பற்றி அப்போதைய தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவிடம் கேட்ட போது, முதலமைச்சர் ஜெயலலிதா தனக்கு dictate செய்ததாக அவர் கூறியதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் விஜயபாஸ்கரிடம் விசாரித்த போது தான் அவருக்கு இதய கோளாறு இருந்ததே தமக்கு தெரியவந்தது எனவும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பி.எஸ். கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என கூறியது ஏன் என்ற கேள்விக்கு, பொதுமக்களின் எண்ணத்தின் அடிப்படையிலேயே ஆணையம் அமைக்கப்பட்டது எனவும், துணை முதலமைச்சர் என்ற அடிப்படையில் ஆணையம் அமைப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டேன் எனவும் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். இதனிடையே, நாளைய தினமும் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.