நீதிமன்ற உத்தரவின்படி திருச்சி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இன்று 4-வது முறையாக ஆஜராகிய அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கையெழுத்திட்டார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஜெயகுமாரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். அதற்கு டி.ஜெயக்குமார் அளித்த பதிலில்,
“அதிமுக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. ஆனால், திமுக அரசு தற்போது தாக்கல் செய்துள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கென எந்த பிரத்யேக திட்டமும் இல்லை.
ஒட்டுமொத்தமான விவசாயிகளுக்கு ஏமாற்றம்தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது ஆட்சிக் காலத்தில் சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி திட்டங்களைச் செயல்படுத்தி மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தார்.
இந்த திமுக அரசு, தாலிக்குத் தங்கம் திட்டங்களை நிறுத்திவிட்டது. ஏற்கனவே, இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதையும் வழங்காமல், அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் முடிந்துள்ள இந்த நிலையில், இனி பேருந்துக் கட்டணம், மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி என பல்வேறு விலை உயர்வுகளை பொதுமக்களுக்கு பரிசாக முதல்வர் ஸ்டாலின் விரைவில் அளிக்க இருக்கிறார்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.