“தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 – 12-ம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு/பட்டயப்படிப்பு/தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு லட்சம் மாணவிகள் ஒவ்வோர் ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக பட்ஜெட்டில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தமிழக பட்ஜெட் 2022 குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், `தாலிக்குத் தங்கம்’ திட்டம் மாற்றப்பட்டு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு ஆதரவு ஒரு பக்கமும், எதிர்ப்பு மறுபக்கமும் கிளம்பியுள்ளன.
பட்டப்படிப்பு படித்த ஏழைப் பெண்ணின் திருமணத்துக்கு ஒரு பவுன் தங்கமும், ரூ 50,000-ம், பள்ளிப்படிப்பு முடித்த பெண்களின் திருமணத்துக்கான நிதி உதவியாக ஒரு பவுன் தங்கத்துடன் ரூ. 25,000-ம் வழங்கும் திட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்தது.
கடந்த 18-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று கல்லூரியில் சேருகின்ற பெண்களுக்கு மாதம் தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை, `திட்டத்தால் பயன்பெறத் தகுதியுள்ள உண்மையான ஏழைப்பெண்களுக்கு அரசின் நிதி இனி சரியாகப் போய் சேரும், இடைத்தரகர்களுக்கு வேலை இருக்காது. ஏழை மாணவிகளை கல்லூரி வரை படிக்க வைக்க ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் அமையும்’ என்று பல்வேறு அமைப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
அதே நேரம், `மீண்டும் தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை தொடங்க வேண்டும். இந்து திருமண முறையை தடுக்கும் வகையில் தி.மு.க அரசு, தாலிக்கு தங்கம் வழங்குவதை நிறுத்தியுள்ளது. மீண்டும் இத்திட்டத்தை தொடரவில்லையென்றால் அரசை வலியுறுத்தி பா.ஜ.க உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது’ என்றும் குரல்கள் எழுகின்றன.
இந்நிலையில் நேற்று மதுரையில் நடந்த சமூக நலத்துறை விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “பட்ஜெட்டில் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. கல்வி மற்றும் பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும், அதுதான் நிதி மற்றும் சட்ட அடிப்படையில் நடைமுறைக்கு வருகிறது. இதைத்தான் நாங்கள் திராவிட மாடல் என்கிறோம்.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தில் சில குறைகள் இருந்தன. 4 ஆண்டுகள் பின் தங்கியிருந்ததைப் பார்த்தேன். அதை சரிசெய்ய முடியவில்லை. அந்தக் குறைகளை திருத்த வேண்டியே மாதந்தோறும் மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டமாக மாற்றி பள்ளி, கல்லூரி அளவில் பல அம்சங்களோடு கொண்டு வந்துள்ளோம். பள்ளிக்கல்வி அளவில் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகமாக உள்ள நிலையில், கல்லூரி கல்வி அளவில் மாணவிகள் சதவிகிதம் குறைவாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டுதான் மாதம்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளோம்.
தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொள்கை மாறாமல் இருக்கிறோம். எங்களை பொறுத்தவரை அடிப்படைக் கொள்கைக்கான அரசியலை முன்னெடுத்து வருகிறோம்” என்றார்.