தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், கடந்த 2011 வரை பட்டம், பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வந்தது.
2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நிதி உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கத்தையும் அறிவித்தார். பின்னர், 2016-ல் மீண்டும் முதல்வரான ஜெயலலிதா, தாலிக்கான தங்கத்தை 4 கிராமில் இருந்து 8 கிராமாக உயர்த்தி அறிவித்தார்.
இந்த நிலையில், இந்த திட்டத்திற்கு பதிலாக உயர்கல்வி செல்லும் அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என்று தற்போதைய தமிழக பொது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “எதற்கெடுத்தாலும் சமூக நீதி என்று பேசும் இந்த திமுக அரசு, தாலிக்குத் தங்கம், திருமண நிதியுதவி ஆகிய திட்டங்களை நிறுத்திவிட்டது.
2.14 கோடி இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தருவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதையும் வழங்காத திமுக அரசு, தற்போது அரசுப் பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
திமுக அரசின் ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். வரும் காலங்களில் தகுந்த பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்” என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.