புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமியிடம் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்துக்கு வரிவிலக்குக் கோரி பாஜகவினர் இன்று மனு அளித்தனர். முதல்வர் இதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இப்படம் பாராட்டும் எதிர்ப்புமாக கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. புதுச்சேரியில் ’தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை அண்மையில் ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, பாஜக அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் பார்த்தனர்.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இத்திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் பாஜகவினர் மனு அளித்தனர். அப்போது சட்டப்பேரவைத்தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக எம்எல்ஏக்கள் கல்யாணசுந்தரம், ரிச்சர்ட், ஆதரவு சுயேச்சை எம்எல்ஏ கோலப்பள்ளி அசோக் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதுபற்றி மாநிலத்தலைவர் சாமிநாதனிடம் கேட்டதற்கு, “திரைப்படத்துக்கான வரியை நீக்க ஆவண செய்வதாக முதல்வர் தெரிவித்தார். காஷ்மீரில் பூர்வக்குடி மக்களாக வாழ்ந்த பண்டிட் சமூகத்தைச் சேர்ந்தோர் அனுபவித்த கடின சூழலையும் நிஜத்தையும் திரைப்படமாக எடுத்துள்ளனர். பிரதமர் மோடியின் முயற்சியால் தற்போது காஷ்மீர் அமைதியாகவும், மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் உருவாகியுள்ளது.
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பற்றி எவ்வித தவறான கருத்தையும் தமிழக முதல்வர் ஸ்டாலினே தெரிவிக்காத சூழலில், புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா, அத்திரைப்படத்தை பார்க்காமல் தவறான கருத்து தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. புதுச்சேரி திமுகவினரும், காங்கிரஸாரும் காஷ்மீர் பற்றி பேச எவ்வித தகுதியும் இல்லாதவர்கள்” என்று குறிப்பிட்டார்.