தமிழ் பட்டிமன்றங்களில் தனது பேச்சாற்றலால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றவர் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர். பட்டிமன்றங்களில் ஆற்றொழுக்காக அடுக்குமொழியில் பேசுபவர் கவிதா ஜவகர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் இரத்த தானம் செய்த 1070 பேருக்கு பாராட்டு விழா, சென்னையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர் சேகர் பாபு, திமுக எம்.பி தயாநிதி மாறன், கவிஞர் சல்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திமுகவின் இந்த நிகழ்ச்சியில்தான், பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகரும் இணைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு ஆகியோரை புகழ்ந்து பேசியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளில் இரத்த தானம் செய்த 1070 பேருக்கு பாராட்டு தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் பேசிதாவது: “இந்த பூமியிலே பிறந்த எத்தனையோ மனிதர்கள், தங்கள் செயலாலே மனிதநேயம் மிக்கவர்களாக வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால், தன்னுடைய பிறந்தநாளையே மனிதநேயத் திருநாளாக மாற்றிய ஒரே மாண்புமிக்க தலைவர் நம்முடைய முதல்வர்தான். வருடைய பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று 1070 பேர் குறுதிக்கொடை வழங்கியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டின் குரலை டெல்லி பாராளுமன்றத்தில் முழக்கிக்கொண்டிருக்கிற எம்.பி தயாநிதி மாறன்,
எட்டாக் கணியாக இருந்த அறநிலையத்துறை அடித்தட்டு மக்களுக்கும் எட்டுகிற வண்ணமாக மாற்றிக் காட்டிய மனிதநேய அமைச்சர் சேகர் பாபு என்று தலைவர்களைப் புகழ்ந்து கூறினார். அப்போது, தொண்டர்கள் நீண்ட நேரம் கைகளைத் தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பேசிய கவிதா ஜவகர், “தமிழ்நாட்டை சரி செய்ய வந்திருக்கிற திராவிட ரத்தம், திரையுலகின் மாமன்னன், இப்போது அவர் மாமன்னன் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். எப்போதும் மக்களுக்கு இடையில் நல்லத் தொண்டன், உதயநிதி ஸ்டாலின் என்று புகழ்ந்து பேசினார்.
நிகழ்சியில் தொடர்ந்து பேசிய கவிதா ஜவகர், ஒரு பாரசீகப் பழமொழி ஒன்று உள்ளது. அவருடைய புகழை எழுதுவதற்கு எனக்கொரு தங்கப் பேனா கொடுங்கள். அவருடைய புகழைப் பற்றி பேசுவதற்கு எனக்கொரு தங்க நாக்கை கொடுங்கள் என்று உள்ளது. அப்படி தங்கப் பேனாவால் வைர வரிகளால் எழுதப்பட வேண்டிய சரித்திரம் நம் முதல்வர் அவர்களின் ஆட்சித் திறம் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், எந்த ஒரு கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாள் அரசியல் செய்யலாம், ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் செய்யக்கூடாது என்பதுதான் உயர்ந்த நல் அறம். அந்த உயர்ந்த அரசியல் நல் அறத்தை சொல்லால், செயலால் நிரூபித்துக்காட்டியவர் நம்முடைய முதல்வர்தான்.
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா புத்தகப் பை அடிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 65 லட்சம் புத்தகப் பைகள் தயாராக இருக்கிறது. அதிலே இரண்டு முன்னாள் முதல்வர்களின் படங்கள் அச்சடிக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆட்சி நம்ம ஆட்சி. இது குறித்து கல்வித்துறை அமைச்சர் கூறுகையில், இது போல அவர்கள் ஒட்டுமொத்தமாக அவர்கள் ஏற்கெனவே செய்து வைத்துவிட்டார்கள். அதுமட்டுமில்லாமல், அவர்கள் மியூசிக்கள் சேர் மாதிரி மாறி மாறி 9 அமைச்சர்கள் வந்திருக்கிறார்கள். என்ன செய்வது. ஒரு 13 கோடி ரூபாய் செலவு செய்தால் நாம் எல்லாவற்றையும் சரி செய்துவிடலாம். அதற்கு அதற்கு முதல்வர் அவர்கள் சொன்ன பதில் என்ன தெரியுமா? அந்த பைகளில் அவர்கள் படம் இருக்கிறதா? அதனால் என்ன? இருந்துவிட்டு போகட்டுமே… மக்களின் பணம் ஒருபோதும் வீணடிக்கப்படக் கூடாது என்று கூறினார். இது மேலோட்டமாக பார்த்தால், உங்களுக்கு இது ஏதோ சாதாரணமாகத் தோன்றும். நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ஒரு ஐடி கார்டு கொடுக்கிறார்கள். உங்களுக்கு கொடுத்த ஐடி கார்டுல, ஏற்கெனவே, அந்த வேலையில் இருந்த ஒருவருடைய படம் இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும். உங்களுக்கு என்னைப் பார்த்தால் எப்படி தெரிகிறது.
எனக்கு முன்னாடி ஒருத்தர் வேலை பார்த்தாராம், அவருடைய படத்தை எனக்கு ஐடி கார்டாக கொடுத்தால் நான் எப்படி வேலை பார்க்கிறது என்று சொல்வோமா இல்லையா? ஒரு சாதாரண வேலைக்கு போகிற நாமலே சொல்வோம்.
ஆட்சியை அதிக எண்ணிக்கையில் கைப்பற்றிய மக்களின் முதல்வர் சொன்னார். அவர்களின் படம் இருந்தால் இருந்துவிட்டு போகட்டும் இந்த பெருந்தன்மைதான் பெருந்தலைவனாக மாற்றிக்கொண்டிருக்கிறது. தமிழர்களின் பண்பாடு என்னத் தெரியுமா? புகழெனின் உயிரையும் கொடுப்பர். நமக்கு புகழ் கிடைக்கிறது என்றால் உயிரையும் கொடுப்பர். தன் தேசப் பிள்ளைகளுக்கு புகழையும் கொடுப்பார் என்றால் அதற்கு நம்முடைய முதல்வர்கள் அவர்கள்தான் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் புகழாரம் சூட்டினார்.
இதையடுத்து, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் கவிதா ஜவகர் திமுகவில் இணைந்துவிட்டாரா என்ற பேச்சுகள் எழுந்துள்ளன. உதயநிதி மேடையில், ஆற்றொழுக்காக தமிழில் முதலமைச்சரை புகழ்ந்து கவிதா ஜவகர் சரவெடியாக பேசிய வீடியோவை சமூக ஊடகங்களில் திமுக ஆதரவாளர்கள் பலரும் புகழ்ந்து பாராட்டி பகிர்ந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”