புதுடெல்லி: தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியில் இருக்கும் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி எம்.பி.யும், மக்களவை திமுக துணைத் தலைவருமான கனிமொழி மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில், ”தேசிய நெடுஞ்சாலை என்எச்-7ஏ -வில் (புதிய பெயர் என்எச்-138) அமைந்துள்ள வல்லநாடு பாலமானது 2013ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அந்தப் பாலம் மிகவும் ஆபத்தான நிலையில் சேதமடைந்துள்ளது. பாலத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கி உள்ளன. மத்திய சாலைப்பணிகள் ஆராய்ச்சி நிறுவனம், பாலத்தின் வலது புறம் சேதமடைந்துள்ளதாகவும், உடனடியாக அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், இதேபோல இடதுபுறம் பாலம் சேதமடைய தொடங்கி விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இது அவ்வழியே பயணிக்கும் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்பாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை எனில், உயிர்ச்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது.
எனவே, இந்தப் பாலத்தில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள அவசரம் மற்றும் அவசியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உணர்த்தி, இது தொடர்பான உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினை குறித்து ஏற்கெனவே கடந்த ஆண்டு ஜூலை 29ம் தேதி தான் கடிதம் எழுதியுள்ளதையும், கனிமொழி தனது மின்னஞ்சலில் சுட்டிக்காட்டி உள்ளார். முன்னதாக வல்லநாடு பாலத்தை எம்பி கனிமொழி இன்று (திங்கள்கிழமை) மீண்டும் சென்று பார்வையிட்டிருந்தார்.