நாகப்பட்டினம்: நல்லாட்சி நடைபெறும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிடக் கூடாது. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாகை அவுரித்திடலில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும் எம்.பியுமான செல்வராஜ் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் பேசியது: தமிழகத்தில் மதச் சார்பற்ற நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது பாராட்டுக்குரியது.
அதேநேரம், பெண்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை, அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் தற்காலிக ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகியவை குறித்து, தமிழக அரசின் பட்ஜெட்டில் எந்தவித அறிவிப்பும் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. நல்லாட்சி நடைபெறும் என்ற நம்பிக்கையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தமிழக மக்கள் வாக்களித்தனர். அவர்களுக்கு தமிழக அரசு துரோகம் செய்துவிடக் கூடாது. தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இதற்கான ஒரு குழுவை அமைத்து, உரிய முறையில் ஆய்வு செய்து தீர்வுகாண வேண்டும். குடிமனைப் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் கூடுதல் வாடகை கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதே தவறை தற்போதைய அரசு செய்யாமல், பகுதி முறை வாடகை வசூலிக்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றார்.
முன்னாள் மாநிலச் செயலாளர் மறைந்த தா.பாண்டியனின் வரலாறு அடங்கிய நினைவு மலரை கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி.ராஜா வெளியிட, மாதர் சங்க தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஆனி ராஜா பெற்றுக்கொண்டார். தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.