ஆட்சிக்கு வந்ததும், நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், முறைகேடாக நகைக்கடன் பெற்றவர்களுக்கு எவ்வாறு தள்ளுபடி செய்ய முடியும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பேசுவது முறைகேடுகளை ஆதரிப்பது போல் இருப்பதாக கூறினார். இதனிடையே, விளக்கமளித்த அமைச்சர் பெரியசாமி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல இடங்களில் கடன் பெற்று முறைகேடுகளில் செய்துள்ளதாக கூறினார்.
மேலும், ஆதார் அட்டையில் தன்னை அரசு ஊழியர் என தவறாக குறிப்பிடப்பட்டிருப்பதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தம்மை தொடர்பு கொண்டு நகைக்கடன் தள்ளுபடிக்கு அணுகியதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இதுபோன்று உரிய ஆதாரத்துடன் யார் அணுகினாலும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருப்பதாக தெரிவித்தார்.