மதுரை; கோடை காலத்தில் பள்ளி மாணவர்கள், பொதுமக்களுக்கு பெரும் பொழுதுப்போக்கு வரப்பிரசாதமாகவும், நீச்சல் கற்றுக் கொள்ளும் இடமாகவும் திகழ்ந்த மாநகராட்சி நீச்சல் குளம் நிரந்தரமாக மூடி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் குளங்கள், கண்மாய்களில் நிரம்பி தண்ணீலும், விவசாய கிணறுகளிலும் சிறுவர், சிறுமிகள் நீச்சல் கற்றனர். தற்போது குழந்தைகள் நீச்சல் கற்றுக் கொள்ளும் அளவிற்கு ஆண்டுமுழுவதும் தண்ணீர் நிரம்பிய நீர்நிலைகளை பார்ப்பது அரிதாக இருக்கிறது. மேலும், அப்படியே இருந்தாலும் அவற்றின் சுகாதார சீர்கேடும், பாதுகாப்பு இன்மையும் சிறுவர்களை அங்கு நீச்சல் கற்றுக் கொள்ள பெற்றோர் அனுமதிப்பதில்லை. அதனால், நகர்புறங்கள், கிராமங்களில் வசிக்கும் பள்ளி மாணவர்கள் நீச்சல் கற்க வசதியாக உள்ளாட்சி அமைப்புகள், விளையாட்டு மேம்பாட்டு துறைகள் மூலம் முக்கிய நகரங்களில் நீச்சல் குளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெரியவர்களும் இந்த நீச்சல் குளங்களில் பொழுதுப்போக்காக சென்று வந்தனர்.
மதுரை மாநகராட்சியில் காந்தி மியூசியம் அருகே மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வந்தது. இந்த நீச்சல் குளத்தில் பெரியவர்கள் ரூ.20க்கும், 10 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் ரூ.10க்கும் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பள்ளி மாணவர்கள், நீச்சல் கற்காத இளைஞர்களுக்கு இந்த மாநகராட்சி நீச்சல் குளம் மிகவும் பயனுள்ளதாக இருந்தனர். கோடை காலங்களில் நீச்சல் பயிற்சி பெறவும், பொழுதுப்போக்கிற்காக நீச்சலடிக்க வருவதற்கும் அதிகமானோர் திரண்டனர். காலை 8 மணிக்கு தொடங்கும் இந்த நீச்சல் குளம் மாலை 6 மணி வரை செயல்பட்டது. இந்த நீச்சல் குளத்தை நடத்துதற்கு தனியாருக்கு மாநகராட்சி டெண்டர் விட்டது.
நீச்சல் குளத்தில் வருவாய் பார்த்த தனியார் நிர்வாகங்கள், அதனை முறையாக பராமரிக்கவில்லை. குளத்தல் உள்ள தண்ணீரை அடிக்கடி மாற்ற வேண்டும். மேலும், குளத்தின் அடிப்பகுதியில் உடைந்த தரைகளை கூட பராமரிக்காமல் நீச்சல் பயிற்சி பெற வந்த பலர் காயமடைந்து சென்றனர். அதனால், இடையில் அவ்வப்போது குற்றச்சாட்டுகள் எழுந்ததும், அதை பராமரிக்க நீச்சல் குளம் மூடப்படுவது வாடிக்கையாக இருந்தது. ஆனால், தற்போது கரோனாவுக்கு பிறகு நிரந்தரமாக இந்த மாநகராட்சி நீச்சல் மூடி வைக்கப்பட்டது. அதன்பிறகு தற்போது வரை திறக்கப்படவில்லை.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2021ம் ஆண்டே ரூ.10 லட்சத்திற்கு மாநகராட்சி நீச்சல் குளம் தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிக்காக மூடி வைக்கப்பட்டிருக்கிறது. பணிகள் நடக்கிறது. மே 1ம் தேதி முதல் திறக்கப்படும்’’ என்றனர்.