நிலம் விற்பனையில் தொழிலதிபரிடம் 97 இலட்ச ரூபாய் மோசடி செய்த புகாரில் மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி உள்ளிட்ட மூவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த சுனில் கோபி கோவை நவக்கரையில் குடியிருந்து வருகிறார். மயில்சாமி என்பவர் தனக்குச் சொந்தமான நாலேகால் ஏக்கர் நிலத்தை சுனில் கோபிக்கு அதிகாரப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
அந்த நிலத்தைத் தனது பெயருக்கு மாற்றிய சுனில்கோபி அதை விற்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 2016ஆம் ஆண்டு கோவை நீதிமன்றத்தில் மயில்சாமி தொடுத்த வழக்கில், சுனில் கோபி பெயருக்கு மாற்றப்பட்ட பத்திரம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் பத்திரம் ரத்து செய்யப்பட்டதை மறைத்த சுனில்கோபி, தொழிலதிபரான கிரிதரனுக்கு அந்த நிலத்தை 97 இலட்ச ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இந்நிலையில் நில உரிமை குறித்துக் கடந்த ஆண்டு இணையத்தளத்தில் கிரிதரன் பார்த்தபோது, தனது பெயரில் இல்லாத நிலத்தை விற்று சுனில் கோபி ஏமாற்றியது தெரியவந்தது.
இது குறித்துக் கோவை மாவட்டக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் கிரிதரன் அளித்த புகாரின் அடிப்படையில் சுனில் கோபி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.