பெற்றோர் வாங்கிக் கொடுத்த 2 லட்ச ரூபாய்க்கு பைக்கை வீலிங் செய்து போலீசிடம் பறி கொடுக்கும் ஊதாரி இளைஞர்கள் மத்தியில், குடும்பத்தின் வறுமையான சூழலிலும், ராணுவத்தில் சேர வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை பார்த்துக் கொண்டே தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி பயிற்சி செய்யும் 19 வயது சிறுவனின் விடா முயற்சி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
பெற்றோர் சம்பாத்தியத்தில் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் விலை கொடுத்து அதிவேக பைக்குகளை அடம் பிடித்து வாங்கும் இளசுகள் செய்யும் சேட்டைகள் சொல்லிமாளாது.
பைக்கில் இரு சக்கரங்கள் இருக்க கெத்துக்காட்டுவதாக நினைத்து ஒற்றை வீலில் பைக்கை ஓட்டி, சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் சென்னை கடற்கரை சாலையில் பைக்கில் வித்தை காட்டி அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வைரலாக்கியதால், 3 பேரும் தங்களது விலை உயர்ந்த பைக்குகளை போலீசாரிடம் பறிகொடுத்துள்ளனர்
பத்து காசுக்கு பிரயோசனமில்லாத செயல்களை செய்யும் இத்தகைய ஊதாரி இளைஞர்களுக்கு மத்தியில் உத்ரகாண்ட் மாநிலம், அல்மோராவை சேர்ந்த 19 வயது இளைஞர் பிரதீப் மெக்ரா என்பவர் வறுமையான குடும்ப சூழ் நிலையிலும் வேலைபார்த்துக் கொண்டே , தினமும் 10 கிலோ மீட்டர் தூரம் ஓடி உடலை வலுவாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
தாய் மருத்துவமனையில் இருக்க சகோதரருடன் தங்கி தனியார் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளைஞர் பிரதீப் மெக்ரா இரவு நேரத்தில் சாலையில் தனியாக ஓடுவதை பார்த்த பாலிவுட் இயக்குனர் வினோத் காப்ரி அவருக்கு காரில் லிப்ட் கொடுக்க முன்வந்துள்ளார்.
அதற்கு பிரதீப் மெக்ராவோ, ராணுவத்தில் சேர வேண்டும் என்பது தனது லட்சியம் என்றும் அதற்காக பயிற்சி எடுப்பதாக கூறியதோடு, தனக்கு இப்போது தான் ஓடுவதற்கு நேரம் கிடைத்துள்ளதாகவும் பொறுப்புடன் பதில் சொல்லியவாறே ஓடிக் கொண்டிருந்தார்.
இன்று ஒரு நாள் என்னுடன் வந்து டின்னர் சாப்பிடு என்று இயக்குனர் வினோத் காப்ரி அழைத்த போதும் வர மறுத்ததோடு , காலையில் வேலைக்கு புறப்படுவதற்கு முன்பாக சமைக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால் இப்போது ஓடுவதாக கூறியதோடு உங்களுடன் காரில் வந்தால் என்னுடைய பயிற்சி பாதிக்கப்படும், தனக்காக தனது சகோதரர் அறையில் காத்துக் கொண்டிருப்பார் என்று கூறியவாறு ஓடிக் கொண்டே இருந்தார்
இந்த வீடியோவை காரில் இருந்த படியே பதிவு செய்த இயக்குனர் வினோத் காப்ரி உன்னுடைய வீடியோவை சமூகவலைதளங்களில் பதிவிட்டால் இந்த வீடியோ வைரலாகும் தெரியுமா என்று கூறிய போது கூட என்னை எல்லாம் யாருக்கு தெரிய போகிறது என்று கூறியவாறு நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்று ஓடிக் கொண்டே இருந்தார்.
சுத்தமான தங்கம் என்று தலைப்பிட்டு இந்த வீடியோவை இயக்குனர் வினோத் காப்ரி பகிர்ந்துள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இளைஞர் பிரதீப் மெக்ராவை புகழ்ந்து பாராட்டி உள்ளார்.
கனவு காணுங்கள் நிச்சயம் நிறைவேறும் என்ற அப்துல்கலாமின் தன்னம்பிக்கை வரிகளுக்கு உயிரூட்டும் பிரதீப் மெக்ராவுக்கு சமூக வலைதங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.