மைசூரு, : ”பள்ளி பாடத்திட்டங்களில் பகவத் கீதையை சேர்க்கும் திட்டம் ஏதும் அரசிடம் இல்லை. ஆலோசனையில் இல்லாத விஷயதை பற்றி, எதற்காக பேச வேண்டும்,” என சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.மைசூரில் அவர் நேற்று கூறியதாவது:பள்ளி பாடத் திட்டங்களில் பகவத் கீதையை சேர்க்க, அரசு ஆலோசிக்கவே இல்லை.
ஆலோசிக்கவில்லை என்ற பின், அந்த விஷயத்தைப்பற்றி ஏன் பேச வேண்டும்?சட்டசபை கூட்டத்தொடர், நிர்ணயித்தபடி மார்ச் 30 வரை நடக்கும். எந்த காரணத்துக்காகவும், கூட்டம் முன் கூட்டியே முடிக்கப்படாது.’காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்படத்தை நானும் பார்த்தேன். படத்தை பார்ப்பது எங்களின் விருப்பம். பார்க்காமல் இருப்பது, காங்கிரசாரின் விருப்பம். படத்தை பார்க்கும்படி, பலவந்தப்படுத்தவில்லை.வரலாற்றில் என்ன நடந்துள்ளது என்பதை, மக்களிடம் விவரிக்க வேண்டும். அதைத்தான் இந்த திரைப்படம் செய்கிறது.
இதில் தவறென்ன. இது ஒரு சமுதாயத்துக்கு எதிரான திரைப்படம் என கூறுவதில் அர்த்தமில்லை. நடந்த உண்மைகளை, மக்களுக்கு தெரிவிக்கவே கூடாதா.ஹிஜாபுக்காக பிடிவாதம் பிடித்து, தேர்வுக்கு ஆஜராகாதவர்களுக்கு, மறு தேர்வு நடத்தப்படாது.இவ்விஷயத்தில் அரசின் முடிவில் மாற்றமில்லை. கர்நாடக உயர்நீதிமன்றத்தின் உத்தரவை, பின்பற்றுவது அரசின் கடமை. இதிலிருந்து தவறி, நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளாக, நாங்கள் தயாராகவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.குஜராத் மாநிலம் போல கர்நாடகாவிலும் பள்ளி பாடங்களில் பகவத் கீதை இடம்பெறும் என சில நாட்களுக்கு முன் மாநில அரசு அறிவித்தது.அப்போதே அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர்.அதையடுத்து, அந்த முடிவை அரசு திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. இதற்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
Advertisement