பெங்களூரு : எரிபொருள் விலை, சமையல் எண்ணை விலை உயர்வு என, பல சுமைகளில் சிக்கித் தவிக்கும் பொது மக்களுக்கு, மற்றொரு அதிர்ச்சி காத்திருக்கிறது. பால் விலையை உயர்த்த, கே.எம்.எப்., முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, கே.எம்.எப்., எனும் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தலைவரும், எம்.எல்.ஏ.,வுமான பாலசந்திர ஜார்கிஹோளி, நேற்று கூறியதாவது:நந்தினி பால் விலையை உயர்த்தும்படி, 14 மாவட்டங்களின் பால் கூட்டுறவு அமைப்பினர், நெருக்கடி கொடுக்கின்றனர்.பால் விலையை உயர்த்தினால், அதையே விவசாயிகளுக்கு தருவதாக கூறுகின்றனர்.
பால் விலை உயர்வு பற்றி, முதல்வர் பசவராஜ் பொம்மையுடன், ஆலோசனை நடத்தினோம். சாதகம், பாதகங்களை அலசி, ஆராய்ந்து முடிவு செய்யலாம் என அவர் கூறியுள்ளார்.கோடை காலத்தில் பால் உற்பத்தி குறையும். எனவே, பாலுக்கு கூடுதல் தொகை கொடுத்தால், விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும். எருமைப்பாலை லிட்டருக்கு, 36 ரூபாயிலிருந்து, 38 ரூபாயாக அதிகரித்தோம்.நாட்டிலேயே, கர்நாடகாவில் தான் குறைந்த விலைக்கு பால் விற்பனையாகிறது. மற்ற மாநிலங்களில், பால் விலை அதிகம் உள்ளது. மக்களுக்கு சுமை ஏற்படாமல் பால் விலையை அதிகரித்தால், விவசாயிகளுக்கு நன்மை பயக்கும். முதல்வர் என்ன முடிவு செய்வார் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement