இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது உச்சி மாநாட்டு காணொலி மூலம் நடைபெற்றது. பிரதமர் மோடியும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனும் இதில் உரையாற்றினர்.
இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து, இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனிம வளங்கள், நீர் மேலாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம், கொரோனா தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் மோடி திருப்தி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்காக ஸ்காட் மோரிசனுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்றின் போது ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட இந்தியர்களின் நலனில் அக்கறை செலுத்தியதற்காக மோரிசனுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது தொடர்பாக இரு நாடுகள் இடையே கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.