உத்தரப்பிரதேசம் ,உத்தரகாண்ட் ,கோவா மாநிலங்களில் புதிய அரசு அமைப்பது பற்றி பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்பட மூத்த பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
கடந்த 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பஞ்சாப் தவிர இதர நான்கு மாநிலங்களிலும் பாஜக பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதில் உத்தரகாண்ட் அரசு நாளை பதவியேற்க உள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான இரண்டாவது பாஜக அரசு வரும் 25 ஆம் தேதி பதவியேற்கிறது. இந்நிலையில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் அமித் ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள், பொதுச் செயலாளர் சந்தோஷ் ஆகியோர் கலந்துக் கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கோவாவிலும் பாஜக சில சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஆட்சியை அமைக்க உள்ளது.
பதவியேற்பு விழாக்கள், புதிய அமைச்சரவை உத்தரகாண்ட் முதலமைச்சர் போன்றவற்றை இறுதி செய்வதற்காக பாஜக தலைவர்கள் ஆலோசித்தனர். உத்தரப்பிரதேசத்தில் யோகிக்கு ஓரிரு துணை முதலமைச்சர்கள் நியமிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. உத்தரகாண்டில் பாஜக வெற்றி பெற்ற போதும் முதலமைச்சர் பரிசீலனையில் இருக்கும் புஷ்கர் சிங் தாமி தோல்வியைத் தழுவினார்.
இதனால் அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.முன்னதாக இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பிரேன் சிங், இரண்டாவது முறை மணிப்பூர் முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.