பிரைம் டைம் பெருமாளு: சர்ச்சை காட்சியால் சீரியலுக்குக் கிடைத்த பப்ளிசிட்டி; காசிக்குப் போன நடிகை!

“திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் கல்யாணம்!” வரும் போதே பழமொழியுடன் வந்தார் பிரைம் டைம் பெருமாளு.

“நீங்க கேட்ட மாதிரியே லெமன் ஜூஸ் ரெடி. குடிச்சிட்டு கல்யாணமோ, கச்சேரியோ எடுத்து விட‌லாம்” எனச் செய்திக்கு ஆவலானோம்.

”கல்யாணம்தான் மேட்டர். சன் டிவியில சமீபத்துல புதுசா ஒளிபரப்பாகத் தொடங்கின ‘எதிர் நீச்சல்’ சீரியல்ல ஒரு சீன். அந்தக் காலத்துலெல்லாம் கல்யாணம் எப்படி நடந்திச்சு? இப்ப மாதிரியா பொண்ணு மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க? கேட்டா ட்ரெண்டிங், வெட்டிங் போட்டோகிராபின்னு என்னத்தயாச்சும் சொல்லிகிட்டு… போங்கப்பா அந்தப்பக்கம்…’னு இப்படித்தான் போகுது அந்த டயலாக்.

எதிர் நீச்சல் சீரியலில்…

“சமீபத்துல கூட இந்த மாதிரி ஒரு டான்ஸால கடைசி நேரத்துல மாப்பிள்ளை மாறின சம்பவத்தையே பார்த்தோமே… அதை சீரியல்ல காமிச்சிருக்காங்க, அப்படித்தானே?”

“உம்ம கருத்தை யார் கேட்டது? சீரியல்ல அந்தக் காட்சியில நடிச்ச நடிகருக்கும் சீரியலைத் தயாரிச்ச திருச்செல்வத்துக்கும் போன் மேல போனாம். இந்தக் காட்சி எங்களை இழிவு படுத்திடுச்சுன்னு வீடியோகிராபர்களும் வெட்டிங் போட்டோகிராபி எடுக்கிறவங்களும் கொதிச்சுப் போய்க் கிடக்கிறாங்க. என்ன செய்வீகளோ தெரியாது, இதுக்கு வருத்தம் தெரிவிக்கணும்னு கேக்கறாங்க அவங்க.

திருச்செல்வமோ, ‘ஏங்க அது ஒரு பிற்போக்குத்தனமான கேரக்டரின் கருத்து. அந்தக் கேரக்டர் அப்படித்தானே பேசும். நான் எதுக்குங்க வீடியோகிராபர்களைத் திட்டப் போறேன்’னு அப்பாவித்தனமா கேட்டிருக்கார்.

எதிர் நீச்சல் சீரியலில்…

இதுல என்ன ஹைலைட்னா சீரியல் தொடங்கின நாளுல இருந்தே ரேட்டிங் கிடைக்கவே இல்லை. சன் டிவி வரலாற்றுலயே ஓப்பனிங் ரொம்பவே சுமாரா இருந்த சீரியல் இதுதான்னு நினைச்சிட்டிருந்தாங்க. ‘கோலங்கள்’னு ஒரு மெகா ஹிட் தந்த இயக்குநருடைய சீரியல் ஏன் இப்படி இருக்குனு காரணம் தெரியாம தலையைப் பிய்ச்சுட்டிருந்தாங்க. இந்த ஒரேயொரு சீன் வந்து அதையெல்லாம் மாத்திடுச்சு. நெகட்டிவ் பப்ளிசிட்டின்னாலும் பார்க்காதவங்களையும் சீரியலைப் பார்க்க வச்சிடுச்சுன்னு யூனிட்டே பெருமூச்சு விடுது.

வரும் போது சொன்ன பழமொழிக்கு அர்த்தம் புரியுதா?” எனச் சிரித்துவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றார்.

“சினிமா, சீரியல் நியூஸ் ஆங்கரிங்னு பல முகம் கொண்ட சரண்யாவை சாமியார் மாதிரி பார்த்ததும் ’பக்’னு ஆகிடுச்சு” என்றவரிடம், “அதான், அவரது ஃபேஸ்புக் பக்கத்துலயே காசி விசிட் பத்தி எழுதியிருக்காரே, அது பத்தி உமக்குக் கிடைச்ச எக்ஸ்ட்ரா தகவலை மட்டும் சொல்லுமய்யா” என்றோம்.

“பேசினேன். என்னம்மா, இந்த வயசுல காசி கிளம்பிட்டன்னு கேட்டதும், ‘ஏன் எல்லாரும் பேசி வச்ச மாதிரி ஒரே கேள்வியைக் கேக்கறீங்க. எங்க வீட்டுலயும் காசிக்குப் போறேன்னு சொன்னதும் கடுப்பாகிட்டாங்க. சின்ன வயசுல போகக் கூடாதுன்னுதான் சொன்னாங்க. வயசான பிறகுதான் காசி போகணும்னு சட்டமா என்ன? என்னால எல்லாம் வயசாகற வரைக்கும் இதுக்காகக் காத்துக்கிடக்க முடியாது. என்னன்னு தெரியல, மனசுக்குத் தோணுச்சு, என்னதான் இருக்குன்னு பார்த்துடுவோமேன்னு கிளம்பிட்டேன். மூணு நாள் கங்கைக் கரையில இருந்தேன். ஒரு புதுவிதமான அனுபவம் கிடைச்சது.

காசியில் சரண்யா

இங்க நம்மை யார் பார்க்கப் போறாங்க, அதுவும் நெத்தி நிறைய திருநீறு பூசி கெட் அப்பே மாறியாச்சேன்னு நினைச்சா, அப்பவும் நாலு பேர் அடையாளம் கண்டு பேசி நலம் விசாரிச்சாங்க’னு ரொம்பவே உற்சாகமாப் பேசினாங்க” என்றார்.

“நீயூஸ் ஆங்கரிங்ல ரொம்பவே ஆர்வமுள்ள மீடியா பொண்ணுகிட்ட ‘மோடி தொகுதி எப்படி இருக்கு’னும் கேட்டிருக்கலாமே” என்றோம்.

“அதையும் கேட்டேனே… ‘ஏன் பெருமாள் உங்களுக்கு இந்த ஆசை? போன வாரம் மருதமலை முருகனைச் சந்திக்கப் போனேன். இப்ப விஸ்வநாதரைப் பார்க்க வந்திருக்கேன். இப்படி சிவனேன்னு ஆன்மிக ரூட்ல போயிட்டிருக்கிறவளை வம்பு தும்புல மாட்டிவிடணும்னு ஏன் நினைக்கிறீங்க’னு போனைக் கட் பண்ணிட்டாங்களே” என்றபடி விடை பெற்றார் பி.பி.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.