புதுடெல்லி: பெகாசஸ் விவகாரம், உக்ரைன் போருக்கு இடையில் இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா- இஸ்ரேல் இடையே பல துறைகளில் ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பென்னட் அடுத்த மாதம் 2ம் தேதி இந்தியா வர உள்ளார். 4 நாள் பயணத்தின் போது பிரதமர் மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்பட பல துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. இஸ்ரேல் பிரதமர் நப்தாலி பென்னட் கூறுகையில், ‘‘எனது நண்பர் மோடியின் அழைப்பை ஏற்று முதல்முறையாக இந்தியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாம் ஒன்றாக இணைந்து இருநாட்டு நல்லுறவுக்கு வழிவகுப்போம்,” என தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடன் இந்தியா துாதரக உறவை ஏற்படுத்தி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நப்தாலி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது. இஸ்ரேலிய நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை ஒன்றிய அரசு வாங்கி எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகளின் செல்போனை உளவு பார்த்ததாக சில மாதங்களுக்கு் முன் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்னை மற்றும் தற்போது உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் இஸ்ரேலிய பிரதமரின் அரசு முறை பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.