துபாய்: பெங்களூரு ஆடுகளத்தின் மதிப்பு சராசரிக்கும் குறைவாக உள்ளது என, ஐ.சி.சி., தெரிவித்துள்ளது.
இந்தியா வந்த இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் டெஸ்ட் பஞ்சாப் மாநிலம் மொகாலியில் (மார்ச் 4-6) நடந்தது. இரண்டாவது டெஸ்ட் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடந்தது. மூன்று நாட்களுக்குள் முடிந்த இப்போட்டியில் இந்திய அணி 238 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை 2-0 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.இந்நிலையில் பெங்களூரு, சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ஜவகல் ஸ்ரீநாத், சராசரிக்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீநாத் கூறுகையில், ”முதல் நாளிலேயே ஆடுகளம் நிறைய திருப்பங்களை அளித்தது. எனது கணிப்பின் படி, இப்போட்டி பேட்டர்களுக்கும், பவுலர்களுக்கும் இடையிலான போட்டியாக இல்லை,” என்றார்.
இதற்கு முன், 2017ல் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய பெங்களூரு, சின்னசாமி மைதானத்தின் ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ கிறிஸ் பிராட், சராசரிக்கும் குறைவாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
பெங்களூரு, சின்னசாமி மைதான ஆடுகளத்திற்கு ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது. இது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஐ.சி.சி., விதிமுறைப்படி, ஒரு ஆடுகளம் 5 தகுதி இழப்பு புள்ளி பெறும் பட்சத்தில், 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படும்.
Advertisement