பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையான தேசிய கொள்கை ஒன்று அவசியம்…

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட  பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஏனைய 13 விடயங்களை உள்ளடக்கிய வகையில், மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண.வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடத்தின் தேரர்கள் கடிதம் மூலம் ஜனாதிபதிக்கு தெரிவிப்பு.

ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை மகாநாயக்க தேரர்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாதிரியை உருவாக்குதலும் பரிந்துரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்திக்கு, விவசாயத்திற்கு மற்றும் விவசாய மக்களுக்கு நிவாரணம் வழங்குதல், பொருளாதார நெருக்கடிக் காலத்தில் முறையற்ற நிதியீட்டல்களுக்காக அத்தியாவசியமான பொருட்களில் செயற்கையாகப் பற்றாக்குறையை உருவாக்கும் மோசடி வியாபாரிகளுக்கு எதிராகச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

முதலீட்டை ஊக்குவிக்கவும், வெளிப்படையான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றத்தை அதிகரிக்கவும், ஏற்றுமதிப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தையும் கடிதத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

நாட்டில் புதிய முதலீடுகளை ஊக்குவித்தல், அரசக் கடனை மறுசீரமைத்தல், குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குதல், வீண்விரயம், ஊழல் மற்றும் வள துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுக்க நிலையான திட்டத்தை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்காக நடைமுறைப்படுத்திய தூரநோக்குடைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் முழு நாட்டு மக்களினதும் பாராட்டு மற்றும் மகிழ்ச்சி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு கிடைக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி பேதமின்றி நாட்டைப் பொருளாதார ரீதியாக கட்டியெழுப்புவதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் பூரண பங்களிப்பும் அர்ப்பணிப்பும் அவசியம் என்று தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

21.03.2022

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.