புதுடெல்லி,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பாஜக ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது.
மணிப்பூரின் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்வதற்காக பாஜக எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நேற்று காலையில் தலைநகர் இம்பாலில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் நடந்தது. பாஜக எம்.எல்.ஏ.க்களின் இந்த கூட்டத்தில் மீண்டும் முதல்-மந்திரியாக பைரேன் சிங் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து, மணிப்பூர் கவர்னர் இல.கணேசனை சந்தித்து ஆட்சி அமைக்க பைரேன் சிங் உரிமை கோரினார். கவர்னர் அழைப்பு விடுத்ததையடுத்து, இன்று மணிப்பூர் முதல் மந்திரியாக பைரேன் சிங் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில் மீண்டும் மணிப்பூர் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள பைரேன் சிங்கிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மணிப்பூர் முதல் மந்திரியாக பதவியேற்றுள்ள பைரேன் சிங்கிற்கு வாழ்த்துக்கள்.
அவரும் அவரது குழுவும், மணிப்பூரை முன்னேற்றத்தின் புதிய உச்சங்களுக்கு கொண்டு செல்வார்கள் என்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்த நல்ல பணிகளைத் தொடர்வார் என்றும் நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.