ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் “கிராமிய அபிவிருத்தி வேலைத்திட்டம் – 2022” இற்கு அமைவாக மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிகள் இன்று (21) திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் வழங்கப்பட்டன.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டு, பயனாளிகளுக்கான உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் யோகநாதன் றொஸ்மன், மண்முனைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழகத்தின் ஆரையம்பதிக்கான பிரதான கள இணைப்பாளருமான சுரேந்திரன், பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எம்.ஜெயச்சந்திரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி உள்ளிட்ட பெறுமதிவாய்ந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன. இவற்றைப் பெற்றுக்கொண்ட பயனாளிகள் அரசாங்கத்திற்கும் இராஜாங்க அமைச்சருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.