புதிதாக அறிமுகப்படுத்தப்படும் தேசிய கல்விக் கொள்கையின்கீழ் பள்ளிகளில் பகவத்கீதையை பாடமாக கொண்டு வருவதற்கு கல்வியாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாகவும் மாறிவருகிறது.
புதிய தேசிய கல்விக் கொள்கை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு மாநிலங்கள் அமல்படுத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக நாட்டிலேயே முதல் மாநிலமாக குஜராத்தில் வரும் கல்வியாண்டு முதல் 6 முதல் 12-ம் வகுப்புக்கான பாடத்திட்டத்தில் பகவத்கீதை மற்றும் ராமாயணம் சேர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கர்நாடகாவிலும் இப்பாடம் சேர்க்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டார். மாணவர் சமுதாயத்திடம் கீதை நெறியை வளர்க்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வித்துறையை காவிமயமாக்கும் முயற்சிகள் நடப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியதால் இந்த விவகாரம் சர்ச்சைக்குரியதாக மாறியது. கர்நாடக முதல்வர் அறிவிப்பு வெளியிட்ட மறுநாளே அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நாகேஷ், ’பள்ளிகளில் பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை பாடமாக கொண்டு வருவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று மறுத்துள்ளார்.
நாடு முழுவதும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் எதிர்க்கட்சிகள் மத்திய அரசு கல்வித்துறையில் மதச்சாயம் பூச முயல்வதாக குற்றம்சாட்டி வரும் நிலையில், பள்ளிக் குழந்தைகளுக்கு பகவத்கீதை மற்றும் ராமாயணத்தை கற்பிப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நன்னெறியை போதிக்கும் கருத்துகளை மாணவர்களுக்கு கற்பிப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று ஒருதரப்பினரும், ஒரு குறிப்பிட்ட மத போதனையை மட்டும் ஏன் புகுத்துகிறீர்கள் என்று இன்னொரு தரப்பும் கேள்வி எழுப்புவதால் கல்வித்துறையை மையமாக வைத்து அரசியல் விமர்சனங்கள் கிளம்பியுள்ளன.
தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை திமுக அரசு ஏற்கவில்லை. இருந்தாலும் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள அம்சங்கள் ஆளுநர் மூலமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மறைமுகமாக அமல்படுத்தும் நடவடிக்கைகள் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில், பள்ளி பாடத்திட்டத்தில் பகவத்கீதை, ராமாயணம் சேர்க்கப்பட்டுள்ளதற்கு அரசியல் நோக்கங்கள் இருக்கலாம் என்று கருதப்படுவதால் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவே கல்வியாளர்கள் தயங்குகின்றனர். சில கல்வியாளர்கள் மட்டும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளனர். அதன் விவரம்:
கல்வியாளர் நெடுஞ்செழியன்: “அனைத்து மதங்களில் உள்ள நல்ல கருத்துகளையும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ராமாயணம், மகாபாரதம் என இரண்டை மட்டுமே முன்னிலைப்படுத்தி, மற்றவற்றை புறக்கணிக்கக்கூடாது. இஸ்லாம், கிறிஸ்துவம், சமணம், பௌத்தம் என அனைத்திலும் உள்ள நல்ல கருத்துகளை இணைத்து மாணவர்களுக்கு அளிக்கலாம். அப்போதுதான் நாட்டின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கருத்தை முன்வைக்க முடியும்.
அனைவரும் உள்ள உலகில்தான் குழந்தைகள் வளர்கின்றனர். எனவே, அனைத்து மத கருத்துகளை சரிசமமாக உள்ளடக்கியதாக நன்நெறிக் கல்வி இருக்க வேண்டும். கல்வி சார்ந்து மட்டுமே இதை கொண்டு சேர்க்க வேண்டுமே தவிர, அரசியல் சார்ந்து வாக்கு வங்கிக்காக இதுபோன்ற விஷயங்களை முன்னெடுக்கக்கூடாது. கல்வி என்பது அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். எனவே, கல்வியாளர் என்ற முறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்னிறுத்துவதை ஆதரிக்க முடியாது.”
தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயலாளர் முத்துபாண்டியன்: “பன்முகத் தன்மை கொண்ட இந்திய நாட்டில் கல்வி நிலையங்களில் மத ரீதியான கருத்துகளை திணிக்க கூடாது. பகவத்கீதை ஒரு மதத்தை சார்ந்ததாக இருப்பதால் தேவையின்றி மாணவர்களிடம் பிரச்சினையை தான் ஏற்படுத்தும். இந்நூலை அனுமதித்தால் மற்ற மதத்தினர் தங்களின் மத நூங்களையும் அனுமதிக்க வேண்டும் என பிரச்சினை எழுப்ப வாய்ப்புள்ளது. இது அரசியலாக்கப்படும். இதன் மூலம் மாணவர்களுக்கு தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும்.
ஒரு மதத்தின் நூலை மற்ற மதத்தினர் கற்க கட்டாயப்படுத்தவும் முடியாது. இதனால் ஒரு வகுப்பில் 3 மதத்தினர் இருந்தால், இதுபோன்ற நூல்களை தனித்தனியாக மாணவர்களை பிரித்து பாடம் நடத்த வேண்டிய சூழல் உருவாகும். இது மாணவர்களை பிற்போக்கு நிலைக்கு தள்ளும் வாய்ப்பு உருவாகிவிடும். அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்திவிடும். முற்போக்கான எண்ணம் கொண்டுள்ள தமிழகத்தில் இதுபோன்ற நிலை வந்து விடக்கூடாது. இதுபோன்ற சூழ்நிலை உருவாகும் என்பதால் தான் நாங்கள் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.”