மதுரை: மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிடக் கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் சிலைகளை அவமரியாதை செய்வது, உடைப்பது போன்ற சம்பவங்களால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது. சிலைகளை அமைக்கவும், சிலைகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் அரசு ஏராளமான தொகையை செலவிடுகிறது.
இந்நிலையில், மதுரை ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அங்கு சிலை அமைத்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
பின்னர் நீதிபதிகள், ஆனையூரில் பெரும்பிடுகு முத்தரையர் சிலை மார்ச் 19-ல் திறக்கப்பட்டுவிட்டது. இதனால் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டனர்.