புதுடில்லி : நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, டில்லி அமலாக்கத் துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரானார். அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, கட்சியின் தேசிய பொதுச் செயலராகவும், எம்.பி.,யாகவும் உள்ளார்.இந்நிலையில், மாநிலத்தில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., 2020ல் வழக்கு பதிவு செய்தது. அதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரது மனைவி ருசிரா பானர்ஜிக்கு, அமலாக்கத் துறை, கடந்தாண்டு செப்டம்பரில் ‘சம்மன்’ அனுப்பியது. இதை எதிர்த்து, அவர்கள் டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.ஊழல் வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, அபிஷேக் பானர்ஜிக்கும், அவரது மனைவி ருசிரா பானர்ஜிக்கும், அமலாக்கத் துறை புதிய சம்மன் அனுப்பியது.
அதன்படி, டில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், அபிஷேக் பானர்ஜி நேற்று ஆஜரானார். அவரிடம், அதிகாரிகள் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அவரது தரப்பு வாதம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது மனைவி ருசிரா பானர்ஜி, இன்று ஆஜராக உள்ளார்.அதிகாரிகளுக்கு ‘சம்மன்’கடந்தாண்டு செப்டம்பரில் அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத் துறை, ‘சம்மன்’ அனுப்பியது.
அதே நேரத்தில், அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் கோல்கட்டாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர், தொலைபேசியில் ஊழல் தொடர்பாக பேசியதாக, ‘ஆடியோ’ ஒன்று வெளியானது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, கோல்கட்டாவில் உள்ள அமலாக்கத் துறை உயரதிகாரிகள் மூவருக்கு, கோல்கட்டா போலீசார் ‘சம்மன்’ அனுப்பினர்.
இதையடுத்து, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், இந்த சம்மன்களை ரத்து செய்து, டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில், விசாரணை நடத்த அனுமதி அளித்தது. இந்நிலையில், தொழிலதிபர் உடனான தொலைபேசி பேச்சு தொடர்பான வழக்கில் ஆஜராகும்படி, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு, கோல்கட்டா போலீசார் புதிய சம்மன் அனுப்பியுள்ளனர்.