மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகேயுள்ள தலைஞாயிறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளன.
இதனால் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப அச்சமடைந்த பெற்றோர்கள், இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். “எந்நேரமும் மேற்கூரை இடிந்து விழுந்து அசம்பாவிதம் ஏற்படலாம் என்ற அச்சம் உள்ளது. அதனால் உடனடியாக கட்டடத்தை சீரமைக்க வேண்டும்” என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனால், அரசு அதிகாரிகள் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியின் வாயிலில் அமர்ந்து கட்டடத்தை சீரமைக்க வலியுறுத்தி மாணவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
அதையடுத்து, தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த மணல்மேடு போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், `உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு பள்ளிக் கட்டடம் சீரமைத்துத் தரப்படும்’ என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை பொதுமக்கள் தற்காலிகமாக கைவிட்டனர். இந்த சாலை மறியல் காரணமாக மணல்மேடு – சீர்காழி சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.