மாநிலங்களவை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் களமிறங்கும் ஹர்பஜன் சிங்: 4 பேருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

சண்டிகர்: பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார்.

மாநிலங்களவையில் இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா ஆகிய மாநிலங்களில் தலா 1 எம்.பி -யும், அஸ்ஸாமில் 2 எம்.பி.-யும், கேரளாவில் 3, பஞ்சாபில் 5 என எம்.பி பதவிகள் காலியாக உள்ளன. மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே அந்தோணி, ஆனந்த் சர்மா, சிரோமணி அகாலி தள மூத்த தலைவர் நரேஷ் குஜ்ரால் உள்ளிட்டோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இதனால் காலியாகும் 13 இடங்களுக்கும் வரும் 31-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாளாகும். வேட்புமனு பரிசீலனை மார்ச் 24-, தேதியும், வேட்புமனு திரும்பப் பெறுவதற்குக் கடைசி நாள் மார்ச் 24-ம் தேதி எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்பஜன் சிங் உள்ளிட்டே 5 பேர்

மார்ச் 31-ம் தேதி காலை 9 மணி தொடங்கி மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்றும் அதைத் தொடர்ந்து மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பஞ்சாப் சார்பில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் போட்டியிடுகிறார். இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் ஐ.ஐ.டி பேராசிரியர் சந்தீப் பதக், டெல்லி எம்எல்ஏ ராகவ் சத்தா, அசோக் மிடல், தொழிலதிபர் சஞ்சீவ் ஆரோரா ஆகியோரும் ஆம் ஆத்மி கட்சி சார்பில் மாநிலங்களவைக்குப் போட்டியிடுகின்றனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ‘‘கிரிக்கெட் பந்துவீச்சு ஜாம்பவான் என்று இந்தியாவை பெருமைப்படுத்திய டர்பனேட்டர் ஹர்பஜன் சிங் இப்போது நாடாளுமன்றத்தில் பஞ்சாப் மக்களுக்காக குரல் எழுப்பப் போகிறார்’’ என்று கூறியுள்ளது.

ஹர்பஜன் சிங், பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை தேர்தலுக்கு முன்பு சந்தித்தார். அவர் காங்கிரஸில் சேர்ந்து தேர்தலில் போட்டியிடலாம் என தகல்கள் வெளியாகின. ஆனால் அதை ஹர்பஜன் சிங் இதனை திட்டவட்டமாக மறுத்தார். தற்போது அவர் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார்.

பஞ்சாபில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 117 தொகுதிகளில் 92 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதனால் 5 பேரும் வெற்றி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 5 பேரும் வெற்றி பெற்றால் மாநிலங்களவையில் ஆம் ஆத்மியின் பலம் மூன்றில் இருந்து 8 ஆக உயரும்.

இதனிடையே பஞ்சாப் மாநிலங்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் ஹர்பஜன் சிங் வெளி மாநிலங்களைச் சேர்ந்த 4 பேர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாபிற்கு வெளியில் இருந்து வருபவர்களை பொறுத்துக் கொள்ள முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் சுக்பால் கைரா தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.