சென்னை: மேகதாது அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொண்டுவந்த தனித்தீர்மானம், திமுக, அதிமுக, பாஜக உள்பட அனைத்துகட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய அமர்வில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தனி தீர்மானத்தை முன்மொழிந்தார்.அப்போது மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 1978ஆம் ஆண்டு அண்ணா ஆட்சியில் இருந்தபோது மேகதாது குறித்து பேசினார். பின்னர் கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா, போராடினார்கள். பின் எடப்பாடி பழனிச்சாமி போராடினர். தற்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார். என் மகன், பேரன், கொள்ளுப் பேரன் காலம் வரை மேகதாது பிரச்சனை போகுமென நினைக்கிறேன். காவிரி நடுவர் மன்றம், உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதிக்காமல் கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது. மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை தடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேகதாது அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உட்பட எந்த அனுமதியும் மத்திய அரசு அளிக்கக்கூடாது. 2018 உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பில் குறிப்பிடாத, மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அனுமதி தரக்கூடாது. காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. காவிரியில் எந்தவிதமான நீர் தேக்கத்தையும் கட்டக்கூடாது என கர்நாடகத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து மற்ற கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏக்கள், தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி, காவிரி நீரானது டெல்டா மாவட்டங்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது என்று தெரிவித்த துடன், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் மூலம் காவிரி நீர் பிரச்சனைக்கு தீர்ப்பு காணப்பட்டது. காவிரியில் எந்தவொரு திட்டத்திற்கும், கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலை பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்துக்கு ஆதரவு தருவதாக கூறினார்.
காவிரி விவகாரத்தில் அதிமுக ஆட்சியில் பல்வேறு சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்று சுட்டிக்காட்டியவர், மேகதாது அணை கட்ட கர்நாடகாவை அனுமதிக்க கூடாது என முதல்வராக இருந்தபோது பிரதமரிடம் வலியுறுத்தினேன் என்றும், மேகதாது அணையால் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறினார்.
தீர்மானத்தின்மீது பேசிய பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு தெரிவிப்பதாக கூறினார். மேகதாது அணை விவகாரத்தில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மீதும் குற்றச்சாட்டினார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் மறைமுகமாக கர்நாடக அரசுக்கு துணை போய் விடுவார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என பா.ம.க. தெரிவித்தது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேகதாது அணை எதிர்ப்பு தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ஜி.கே.மணி குற்றம் சாட்டினார். அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் தலைமையில் பிரதமரை சந்திக்க வேண்டும் என ஜி.கே.மணி தெரிவித்தார்.
அதேபோல காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை கர்நாடகா மெல்ல பறித்து வருகிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மற்ற கட்சியினரும் தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.
இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, அனைத்துக் கட்சிகளும் மேகதாது தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தந்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். மேலும் மேகதாது விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கையை திமுக அரசு எடுக்கும். எந்த நிலையிலும் கர்நாடக அரசின் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுக்கும் என்று முதல்வர் உறுதி அளித்தார்.
இறுதியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்று கூறினார்.