Tamilnadu assembly highlights resolution passed against Mekedatu dam: மேகதாது கட்டுவதற்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம், தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றப்பட்டது குறித்த தமிழக முதல்வரின் விளக்கம் உள்ளிட்ட, தமிழக சட்டமன்றத்தில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை இப்போது பார்ப்போம்.
மேகதாது அணை கட்டுவதற்கு எதிரான தீர்மானம்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களிலும் பாய்கிறது. ஆனால் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது.
இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. மேலும், 2022-2023-ம் ஆண்டுக்கான கர்நாடகா பட்ஜெட்டில், மேகதாதுவில் புதிய அணை கட்டும் திட்டத்திற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதியளிக்கக்கூடாது என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், தமிழக பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் இன்று நடைபெற்றது. அப்போது, காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தாக்கல் செய்த தீர்மானத்திற்கு, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்துகட்சிகளும் ஆதரவு அளித்ததால் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த தீர்மானத்தில் மேகதாதுவில் கர்நாடகா அணைக்கட்ட மத்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேகதாது அணைக்கு எதிராக தீர்மானத்தை ஆதரித்த அனைவருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உரையாற்றிய முதலமைச்சர், நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர் அவர்கள் மேகதாது சம்பந்தமாக ஒரு தீர்மானத்தை, அரசினர் தனித் தீர்மானமாகக் கொண்டுவந்து, அவரே முன்னுரையாக வரலாற்றிலே பதிவாகியிருக்கக்கூடிய பல்வேறு செய்திகளையெல்லாம் எடுத்துச் சொல்லி, கட்சி பேதமின்றி, அரசியல் பேதமின்றி இந்தத் தீர்மானத்தை நாம் ஏகமனதாக நிறைவேற்றிட வேண்டுமென்ற அந்த அடிப்படையிலே, ஒரு தீர்மானத்தை அவர் முன்மொழிந்திருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை முன்மொழிந்ததற்குப் பிறகு, அதைத் தொடர்ந்து உரையாற்றியிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் நின்று, இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றிட, இந்த அரசுக்கு ஆதரவு தந்தமைக்கு முதலில் உங்கள் அத்தனை பேருக்கும் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மேகதாது அணையைக் கர்நாடகம் கட்டுவதற்கு ஒன்றிய அரசு அனுமதி தருவதை நிச்சயம் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதை எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒத்துக்கொள்ள மாட்டோம் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நடுவர் மன்றத் தீர்ப்பிற்கும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இறுதித் தீர்ப்பிற்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும். அணைக்கு அனுமதி அளிக்க கூடாது என ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலும், சட்டரீதியான நடவடிக்கைகளிலும் இந்த அரசு நிச்சயமாக உறுதியாக இருக்கும். அதிலே எந்தவித பாகுபாடும் பார்க்கமாட்டோம்.
அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை, தமிழ்நாட்டு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்; நிச்சயம் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
தாலிக்கு தங்கம் திட்டம் விளக்கம்
தமிழக பட்ஜெட்டில், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வியில் சேர்க்கைப் பெறும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றலை தடுக்கும் வகையில் மாதம் ரூ.1000 மாணவிகளின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று சட்டசபையில் நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.எல்.ஏ பாண்டியன் தாலிக்கு தங்கம் திட்டத்தால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்ததாக தெரிவித்தார். தற்போது இந்த திட்டம் ஏன் நிறுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் இந்த திட்டத்திற்கு சுமார் 1.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் நடந்தது தெரிய வந்தது என்றும் கூறினார்.
அதைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 1989-ம் ஆண்டு இந்த திட்டத்திற்கு முதல் முதலாக 5,000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டதாகவும், 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சியில் தான் திருமண உதவிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதாவை ஓரிருமுறை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்தேன் – இளவரசி; எதுவும் தெரியாது – ஓ.பி.எஸ் பதில்
மேலும் இந்த திட்டத்தை இடையில் நிறுத்திய அதிமுக அரசு பின்னர் மீண்டும் செயல்படுத்தியதாக கூறினார். அதிமுக அரசு திருமண உதவியை, ரூ.50 ஆயிரம் மற்றும் 8 கிராம் தங்கம் என உயர்த்தி வழங்கியதாக தெரிவித்தார். இந்த நிலையில் நிலுவையில் உள்ள மனுக்களை ஆய்வு செய்ததில் அதில் 24.5 சதவீத பயனாளிகள் மட்டுமே தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும் முறைகேடுகள் நடந்திருப்பதும் உறுதி செய்யப்பட்டு 43 வழக்குகள் பதிவு செய்து அவர்களை கைது செய்துள்ளதாகவும் கூறினார்.
தமிழகத்தில் உயர்நிலைக் கல்வியில் பெண்கள் சேர்வது 46 சதவீதம் மட்டுமே இருப்பதால் அதை சரி செய்ய வேண்டும் என்பதால் தான் தாலிக்கு தங்கம் திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். பெண் உரிமை கொள்கையின் மறுவடிவம் தான் இந்த நிதி உதவி வழங்கும் திட்டம் எனவும் தெரிவித்தார்.
நகைக்கடன் தள்ளுபடி விளக்கம்
5 சவரனுக்கு குறைவாக கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வைத்தவர்களுக்கு தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவ்வாறு அரசு எந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 5 சவரனுக்கு கீழ் அடகு வைத்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யவில்லை என ஆதாரம் கொடுங்கள். ஆதாரம் கொடுத்தால் தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளது. என்று கூறினார். மேலும், முறைகேடு செய்தவர்களுக்கு நகை கடனை தள்ளுபடி செய்ய சொல்கிறீர்களா? என பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி எழுப்பினார்.
மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் பேரூராட்சிகள்
மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட செங்குன்றம் பேரூராட்சியை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என சுதர்சனம் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, உடனடியாக செய்யமுடியாது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதிதாக தரம் உயர்த்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் பணிகளை விரைந்து தொடங்க உள்ளோம். நூறு நாள் வேலை திட்டம் இல்லையென்பதால் மாநகராட்சியுடன் இணைய பேரூராட்சிகள் விரும்புவதில்லை இவ்வாறு கூறினார்.
சாலை விபத்து – காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5000
சாலை விபத்துகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த முதலமைச்சர், சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் விதமாக இன்னுயிரை காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
மேலும், சாலை விபத்தில் சிக்கிய நபர்களை உடனடியாக, Golden Hours-க்குள் மருத்துவமனைக்கு கொண்டுவந்து, உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பண்போடு பணியாற்றும் நல்ல உள்ளங்களுக்கு நற்சான்றிதழும், ரூ. 5,000 ரொக்கப்பரிசும் வழங்கப்படுகிறது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.