தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. இதையடுத்து, பொது பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இதனிடையே மேகதாது அணைக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். தமிழக சட்டப்பேரவை கர்நாடக அரசின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்கிறது. மேகதாதுவில் அணை கட்ட எந்தவித அனுமதியும் மத்திய அரசு கொடுக்கக்கூடாது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது விவகாரம் தொடர்பான தனித்தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிப்பதாக பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பாஜக தனிப்பட்ட முறையில் மத்திய அரசிடம் இது குறித்து நிச்சயமாக வலியுறுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மேகதாது அணைக்கு எதிரான தமிழக அரசின் தீர்மானத்திற்கு பாமக ஆதரவு அளிப்பதாக பாமக தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட மேகதாது குறித்த தனித்தீர்மானத்திற்கு அதிமுக ஆதரவு அளித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக, பாமக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்ததை அடுத்து, மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைபெற்றப்பட்டது.
மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் சட்டப்பூர்வமாக தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.