சென்னை:
ம.தி.மு.க.
துணைப்பொதுச் செயலாளர்கள், தலைமை கழக செயலாளர் உள்ளிட்ட 4 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.
ஏற்கனவே தலைமை கழக செயலாளர் பதவிக்கு வைகோவின் மகன் துரைவைகோ அறிவிக்கப்பட்டு உள்ளார்.
இது அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, கணேச மூர்த்தி எம்.பி, கோட்டார் கோபால் உள்பட மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் சிலர் துரை வைகோவை கட்சிப்பணிக்கு கொண்டு வந்ததை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் வைகோவின் முடிவை எதிர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சிவகங்கையில் மாவட்ட செயலாளர்கள் வைகோவின் முடிவுக்கு எதிராக தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.
இதில் சிவகங்கை மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் மற்றும் திருவள்ளூர், நாகப்பட்டிணம், விருதுநகர் ஆகிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் வைகோ எடுத்துள்ள முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிவிட்டு அதே வாரிசு அரசியலை நாமும் வரவேற்பதா? என்று குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டு உள்ள விரிவான அறிக்கையில், புதிய உறுப்பினர்களை சேர்த்தல், பழைய உறுப்பினர்களை புதுப்பித்தல் ஆகிய பணிகள் நிறைவடைந்த பிறகு கட்சியின் சட்டவாதிகளை பின்பற்றி மாநிலம் முழுவதும் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களும் மூத்த நிர்வாகிகளும் கட்சி தேர்தலில் பங்கேற்கும் வகையில் வேட்பு மனுத்தாக்கல், பரிசீலனை, வாபஸ் பெறுதல் ஆகிய நடைமுறை பின்பற்றி தேர்தலை நடத்த வேண்டும்.
அதற்கான உரிய அவகாசங்களும் வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு உள்ளனர்.