பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்),
உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷியா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும்” என்றார்.
இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா மற்றும் அயர்லாந்தின் வெளியுறவு மந்திரிகள், “ஐரோப்பிய ஒன்றியம் ரஷியா மீதான, குறிப்பாக அதன் இலாபகரமான எரிசக்தி துறையை இலக்காகக் கொண்டு, பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பெரும்பாலான நாடுகள் அவற்றின் 40% எரிவாயுவிற்கு ரஷியாவை நம்பியுள்ளன. இந்நிலையில் , ரஷிய எண்ணெயை குறிவைப்பது என்பது 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடினமான தேர்வாகும். ஆனால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன், ரஷியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை முற்றிலும் தடை செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.