ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைனில் போர் செய்ய தயார் என சிரியாவின் ராணுவம் அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் திகதி ரஷ்யா படையெடுத்தது. 26 நாட்களாக இந்த தாக்குதல் தொடர்ந்து நடக்கிறது.
ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் உக்ரைனின் பல நகரங்கள் சின்னாபின்னமாகி உள்ளன. நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு ஆதரவாக உக்ரைனுக்கு சென்று போரிட தாங்கள் தயாராக இருப்பதாக சிரியா நாட்டின் துணை ராணுவப் படை தெரிவித்துள்ளது.
சிரியாவின் தேசிய பாதுகாப்புப் படையின் (என்.டி.எஃப்) தலைமை கமாண்டர் நபில் அப்தல்லா கூறுகையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக போர்புரிய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இருந்து விருப்பப்பட்டவர்கள் வரலாம் என கடந்த வாரம் அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.
அவரது அழைப்பை ஏற்று, அங்கு சென்று உக்ரைனுக்கு எதிராக போரிட நாங்கள் தயாராக இருக்கிறோம். சிரியாவில் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்ட தீவிரவாதிகளை ஒழிக்க ரஷ்யா எங்களுக்கு உதவி செய்தது. அதற்கு கைமாறாக அவர்களுக்கு உதவுவது எங்கள் கடமை.
சிரியா அரசாங்கம் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து அனுமதி கிடைத்தால் நாங்கள் உக்ரைனுக்கு புறப்பட்டு விடுவோம். எங்களின் போர் முறையை உக்ரைன் ராணுவத்தால் சமாளிக்க முடியாது என கூறியுள்ளார்.