கிழக்கு உக்ரைனில் போர் நீடிக்கும் பகுதியில் மொபைல் மருத்துவமனை உரிமையாளர் ஒருவர் பிடிபடும் ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
உக்ரைன் செய்தி ஊடகம் ஒன்றில் நேரலை விவாதத்தில் கலந்து கொண்ட அந்த நபர், தமது மருத்துவர்களிடம் ஆண்மை நீக்கம் தொடர்பில் கட்டளையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், இது வெறும் வீராவேசமா அல்லது உண்மையில் ரஷ்ய வீரர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்ய அவர் உத்தரவிட்டுள்ளாரா என்பது தொடர்பில் உறுதியான தகவல் இல்லை எனவும், அவ்வாறு அவர் தமது மருத்துவர்களுக்கு உத்தரவிட்டிருந்தால் அது ஜெனிவா உடன்படிக்கையை மீறும் செயல் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
49 வயதான Gennadiy Druzenko தெரிவிக்கையில், நான் எப்போதும் ஒரு சிறந்த மனிதநேயவாதி, ஒரு மனிதன் காயப்பட்டால், அவன் எதிரி அல்ல, நோயாளி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் தற்போதைய சூழல் வேறு. உக்ரைனில் சிக்கும் ரஷ்ய வீரர்களுக்கு கண்டிப்பாக ஆண்மை நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மனிதர்கள் அல்ல கரப்பான் பூச்சிகள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில் கவலை கொண்டுள்ளதாலையே அவ்வாறாக பேசும் சூழல் ஏற்பட்டது என கூறி மன்னிப்பு கோரியுள்ளார்.
தொழில்முறை சட்டத்தரணியான Gennadiy Druzenko கடந்த 2014 முதல் மொபைல் மருத்துவமனைகளை செயல்படுத்தி வருகிறார்.
இவரது மொபைல் மருத்துவமனைகளில் ஆண் மற்றும் பெண் மருத்துவர்கள் சுமார் 500 பேர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பிப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், கிழக்கு உக்ரைனில் காயமடையும் இராணுவத்தினருக்காக முதல் மொபைல் மருத்துவமனையை நிறுவினார்.
இந்த நிலையில் ரஷ்ய விசாரணைக் குழு குறித்த சட்டத்தரணியின் கருத்துக்கு எதிராக குற்றவியல் வழக்கைப் பதிவு செய்துள்ளது.
ரஷ்ய நிர்வாகத்தின் பிடியில் எப்போதேனும் Gennadiy Druzenko சிக்கினால், அவர் மீது ரஷ்ய சட்டத்தின் படி விசாரணை முன்னெடுக்கப்பட்டு தண்டனை அளிக்கப்படும்.
பல்கலைக்கழகத்தில் விளாடிமிர் புடினின் சக மாணவரும் தற்போதைய ரஷ்ய விசாரணைக் குழு தலைவருமான Alexander Bastrykin இந்த விவகாரம் தொடர்பில் கடும் நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், ரஷ்யாவால் தேடப்படும் சர்வதேச குற்றவாளிகள் பட்டியலில் Gennadiy Druzenko பெயரும் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.