புதுடெல்லி: ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சரத் யாதவின் லோக்தந்திரிக் ஜனதா தள கட்சி நேற்று இணைந்தது. பாஜ.வை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று சரத் யாதவ் வேண்டுகோள் விடுத்தார். மூத்த சோசலிஸ்ட் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சரத் யாதவ், லோக்தளம், ஜனதா, ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். ஐக்கிய தனதாதள கட்சியின் மூத்த தலைவராக இருந்த சரத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 2017ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி லோக் தந்திரிக் ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த 5 ஆண்டுகளில் அவரது கட்சி பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.இதையடுத்து, தனது கட்சியை நண்பராக இருந்து எதிரியாகி, தற்போது மீண்டும் நண்பராகி உள்ள லாலு பிரசாத்தின் கட்சியுடன் இணைக்க அவர் முடிவு செய்தார். டெல்லியில் உள்ள சரத் யாதவ் இல்லத்தில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. இதன் மூலம் 25 ஆண்டுகளுக்கு பிறகு லாலு பிரசாத், சரத் யாதவ் மீண்டும் இணைந்துள்ளனர். இது பற்றி சரத் யாதவ் கூறுகையில், ‘‘எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான முதல் கட்ட நடவடிக்கை இது. பாஜ.வை தோற்கடிக்க நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளிடையே ஒற்றுமை வேண்டும்,’’ என்றார்.