மரங்கள் மற்றும் பிற தாவரங்கள் அடர்த்தியாகவும், அதைச்சார்ந்த உயிரினங்களும் வாழும் இடம் காடு. காலநிலை சீராக இருப்பற்கு இவை முக்கிய பங்கு வகிக்கின்றன. காடுகள் அழிவதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மார்ச் 21ல் உலக காடுகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
உலக நிலப்பரப்பில் 30 சதவீதம் காடுகள் உள்ளன. இதில் 60 ஆயிரம் வகைகள் உள்ளன. நிழல், இலை, காய், கனி, மணம், பானம், மழை, குளுமை, துாய்மை, எண்ணெய், உறைவிடம், விறகு என மக்களுக்கு பல வழிகளும் நன்மையை தருகிறது.
ஏன் தேவை
காடுகள் என்பது வெறும் மரங்களை மட்டும் குறிப்பிடுவதில்லை. இது வாழ்க்கை கட்டமைப்பில் ஒன்று. மரங்களும், காடுகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. காடுகளின் உதவியால், நாம் சுவாசிக்க முடிகிறது. தவிர சுட்டெரிக்கும் சூரிய ஒளியிலிருந்து தப்பிக்க மரங்களின் நிழலை தேடிச் செல்கிறோம். காடுகள் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதுடன், மண் அரிப்பையும் தடுக்கின்றன. தட்பவெட்ப நிலை சீராக இருப்பதற்கு காடுகள் உதவுகின்றன.
அழியும் காடுகள்
சாலை, ரயில் விரிவாக்க பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. வனப்பகுதிகளில் காட்டு தீயினால் மரங்கள் எரிந்து சேதமாகின்றன. மக்கள் பயன்பாட்டுக்காகவும் மரங்கள் வெட்டப்படுகின்றன. விளை நிலங்கள், குடியிருப்பு பகுதிகளாக மாறுவதாலும் காடுகளின் அளவு குறைகிறது.
ஒன்றுக்கு பத்து
உலக வனத்துறையின் சட்டப்படி, ஒரு மரத்தை வெட்டும் போது, அதற்கு பதிலாக 10 மரங்கள் நடப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு சதவீதம் மட்டுமே புதிதாக மரங்கள் நடப்பட்டுள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அனைவரும் வீடுகளில் மரம் வளர்ப்பதுடன், ஏற்கனவே இருக்கும் மரங்களை பராமரித்தால் வனங்களை பாதுகாக்கலாம்.
60
உலகில் நிமிடத்துக்கு, 60 கால்பந்து மைதானம் அளவிற்கான காடுகள் அழிக்கப்படுகின்றன.
160
உலகில் 160 கோடி பேர், அன்றாட வாழ்க்கைக்கு காடுகளை நம்பியுள்ளனர்.
78
உலகில் காடுகளின் பரப்பளவில் ரஷ்யா (78 லட்சம் சதுர கி.மீ.) முதலிடத்தில் உள்ளது. பிரேசில் (31 லட்சம் சதுர கி.மீ., ) இரண்டாவது இடத்தில் உள்ளது.