சென்னை: வருங்காலத்தில் லக்சயா சென் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட எனது வாழ்த்துகள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த அனைத்து இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியஷிப் போட்டியின் இறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென்னும் டென்மார்க் வீரர் விக்டோர் அக்செல்செனும் களம் கண்டனர். இதில், இந்திய வீரர் லக்சயா சென்னை, விக்டோர் 21 – 10, 21 – 15 என்ற கணக்கில் தோற்கடித்தார். எனினும் இறுதிப் போட்டி வரை சென்ற லக்சயா சென்னுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறன்றன.
இந்த நிலையில், அனைத்து இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிவரை சென்ற லக்சயா சென்னுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “அனைத்து இங்கிலாந்து இறகுப் பந்தாட்டத் தொடரில் மிக இளம் வயதிலேயே லக்சயா சென் படைத்துள்ள சாதனை கண்டு பெருமை கொள்கிறேன். மதிப்புமிகுந்த இந்த அனைத்து இங்கிலாந்து இறகுப் பந்தாட்டத் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்ற ஐந்தாவது இந்திய வீரர் எனப் பெயரெடுத்த லக்சயா சென் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு மிக அருகில் வந்து அதைத் தவறவிட்டுள்ளார். வருங்காலத்தில் அவர் சிறப்பான வெற்றிகளைக் குவித்திட எனது வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.