கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் 3 மாத தொழிற்கல்வியை பயின்று வந்துள்ளார். சதீஷ், ஆத்தூர் அருகே உள்ள தனது கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்காக கடந்த 11-ம் தேதி கல்லூரியிலிருந்து விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று (20.03.2022) மாலை 4 மணிக்கு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, சதீஷ் தன் நண்பர்களுடன் வழக்கம்போல் பேசாமல் சற்று சோர்வாகவே இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை சக நண்பர்கள் விடுதியில் உணவு அருந்த அழைத்தபோது தனக்கு இப்போது சாப்பாடு வேண்டாம் என மறுத்தாராம். அதன் பின்னர், வகுப்புக்கு செல்ல வேண்டிய மாதவன் வகுப்பிற்கு செல்லாமல் இருந்துள்ளார். ‘ஏன் கிளாஸூக்கு வரவில்லையா’ என நண்பர்கள் கேட்டபோது, `எனக்கு வயிறு வலிக்கிறது. நான் கொஞ்சம் லேட்டா வருகிறேன்’ என்று கூறிவிட்டு சதீஷ் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர் மதிய உணவிற்காக அவருடைய நண்பர்கள் விடுதிக்கு மீண்டும் வந்து, அறையை திறந்தபோது அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்துள்ளது. அந்த விடுதி அறையில் உள்ள மின்விசிறியில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்துள்ளார் சதீஷ். அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவருடைய நண்பர்கள், கல்லூரி ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர். அதையடுத்து மயிலம் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் நேரில் வந்த மயிலம் காவல்துறையினர், மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக மயிலம் காவல்துறை ஆய்வாளர் கிருபாலட்சுமியிடம் பேசினோம். “கோயில் திருவிழாவுக்காக விடுமுறையில் சென்ற மாணவன், நேற்று மாலை தான் கல்லூரிக்கு வந்துள்ளார். இன்று மதியம் அறையில் தூக்கிட்டு இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இறப்பிற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றோம்” என்றார்.